என்னது லியோ படத்தின் ஒரு டிக்கெட் விலை ஒரு லட்சம் ரூபாயா?.. தலையே சுத்துதே
சென்னை: Leo Ticket (லியோ டிக்கெட்) லியோ படத்தின் டிக்கெட்டை கோவில்பட்டியை சேர்ந்த ஒருவர் 1 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் உருவாகியிருக்கிறது. படமானது இன்று பான் இந்தியா படமாக ரிலீஸாகியிருக்கிறது. தங்கள் தளபதியின் படம் வெளியாகியிருப்பதால் அதனை ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடிவருகின்றனர். காலை 9 மணி காட்சிக்கு முன்னதாகவே தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் மேளதாளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகத்தோடு திரையரங்குக்குள் சென்றனர்.

களைகட்டிய திரையரங்கம்: படத்தின் பெயர் போட ஆரம்பித்ததிலிருந்து ரசிகர்கள் உற்சாகத்தில் கத்திக்கொண்டும் விசிலடித்துக்கொண்டும் படத்தை ரசிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக விஜய்யின் இண்ட்ரோ காட்சியை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்றனர். அவரது இண்ட்ரோ காட்சியும் எந்த அலம்பலும் இல்லாமல் ரொம்பவே சிம்ப்பிளாக காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தது.
லோகேஷ் மேஜிக்: படத்தை பார்த்த ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் மேக்கிங்கில் அதகளம் செய்துவிட்டார். கொடுத்த பணத்துக்கு படம் ஒர்த்துதான் என்று சிலாகிக்கின்றனர். அதிலும் மாஸ்டர் படத்தில் விஜய்யை எப்படி வேறு மாதிரி நடிக்க வைத்திருந்தாரோ அதேபோல் லியோவிலும் விஜய்யை வேறு மாதிரி நடிக்க வைத்திருக்கிறார். விஜய்யின் நடிப்பை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கிறது எனவும் கூறினர்.
கலவையான விமர்சனங்கள்: ஒருபக்கம் இப்படி விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடிக்கொண்டிருந்தாலும் மறுபக்கம் படத்தை பார்த்த பொதுவான ரசிகர்கள் படம் தங்களை திருப்திப்படுத்தவில்லை என்று தங்களது விமர்சனத்தை தொடர்ந்து கூறிவருகின்றனர். மேலும் பழைய கதையை ரம்மியமான லொக்கேஷனில் லோகேஷ் கனகராஜ் ஷூட் செய்திருக்கிறார் என்றும் அவர் ஓபனாகவே தெரிவிக்கின்றனர்.
ஒரு டிக்கெட் ஒரு லட்சம் ரூபாய்: இந்நிலையில் கோவில்பட்டியில் விஜய் ரசிகர் ஒருவர் லியோ படத்தின் ஒரு டிக்கெட்டை ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். அதாவது கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்கில் இன்று காலை லியோ படத்தின் முதல் காட்சி ரசிகர்கள் காட்சியாக திரையிடப்பட்டது. அப்போது அந்தக் காட்சிக்கான முதல் டிக்கெட்டை கோவில்பட்டி செண்ட்ரல் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் செல்வின் என்பவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்.
இதுதான் காரணம்: விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்றுவரும் இலவச கல்வி பயிலகத்துக்கு வழங்கும் நோக்கத்தில்தான் இவ்வளவு விலை கொடுத்து லியோ படத்தின் டிக்கெட்டை வாங்கியதாக அவர் தெரிவித்தார். ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு டிக்கெட்டா என்று முதலில் பலரும் அதிர்ச்சியானாலும் செல்வினின் இந்த நோக்கத்தை பார்த்த மற்றவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











