Leo: திடீர் சர்ப்ரைஸ்... விஜய்யின் லியோவில் இணையும் ராஜ்கமல்... க்ரீன் சிக்னல் கொடுத்த கமல்
சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவுப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது லியோ போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் லோகேஷ் பிஸியாகிவிட்டார்.
இந்தப் படம் லோகேஷின் LCU-ல் இணையுமா என்ற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
அதன்படி, விக்ரம் படத்தின் முந்தைய பாகமாக லியோ உருவாகுவதால் இதில் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

லியோவில் இணையும் ராஜ்கமல் பிலிம்ஸ்:விஜய் நடித்துள்ள லியோ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. 125 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்ட லோகேஷ், அடுத்தடுத்து லியோ அப்டேட்டை வெளியிட பிளான் செய்துள்ளார். மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் - லோகேஷ் கூட்டணி இணைந்துள்ள லியோ, இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டரைத் தொடர்ந்து லியோ படத்தையும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்யின் உறவினரான லலித் குமார், லியோ படத்திற்காக பல கோடி ரூபாயை வாரி இறைத்துள்ளாராம். இதனிடையே விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர், இனி தனது படங்களில் 'LCU' இருக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதனால், லியோவும் LCU படமாக இருக்குமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
கைதியில் நடித்த ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், விக்ரமில் மிரட்டிய டான்ஸர் வசந்தி, ஜாஃபர், மாயா கிருஷ்ணன் ஆகியோரும் லியோவில் நடித்துள்ளனர். அதனால், கண்டிப்பாக இந்தப் படம் லோகேஷின் யுனிவர்ஸ் பின்னணியில் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. அதாவது விக்ரம் படத்தின் முந்தைய பாகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கமல், ஃபஹத் பாசில் ஆகியோர் நடிக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், தற்போது கமல் இல்லையென்றாலும் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் லியோ படத்தில் இணைந்துள்ளதாக தெரிகிறது. லோகேஷின் யுனிவர்ஸ் கைதியில் இருந்தே தொடங்கினாலும், விக்ரம் படத்தில் தான் மற்ற கேரக்டர்களை இணைத்தார். அதனால் லியோ தயாரிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸின் பெயரும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. மேலும், லியோ திரைப்படத்தை LCU என அறிவித்துக்கொள்ள கமலும் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம்.
இதனால், லியோவில் விக்ரம் படத்தின் சில காட்சிகளையும் கமலின் வாய்ஸ் ஓவரை மட்டும் வைக்க லோகேஷ் முடிவு செய்துள்ளாராம். அதேபோல், ஃபஹத் பாசில், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் லியோவில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படம் வெளியாகும் போதே அனைத்து சர்ப்ரைஸ் அப்டேட்களையும் வெளியிட வேண்டும் என விஜய் தரப்பில் இருந்து கண்டிஷன் போடப்பட்டுள்ளதாம். இதனால், லியோ மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











