Leo: லியோ டிக்கெட் மோசடி... திருப்பூர் சுப்ரமணியத்தை மிரட்டினாரா லலித் குமார்..? ட்ரெண்டாகும் ஆடியோ
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த வாரம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் இதுவரை 500 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே லியோ டிக்கெட் புக்கிங்கில் தயாரிப்பாளர் லலித் குமார் மோசடி செய்துள்ளதாக திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் திருப்பூர் சுப்ரமணியத்தை லலித் குமார் மிரட்டியதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லியோ டிக்கெட் மோசடி
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸானது. விஜய் - லோகேஷ் கூட்டணியில் முதல் LCU படமாக வெளியான லியோ, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் நாளில் சிறப்பான ஓபனிங் இருந்ததால், பாக்ஸ் ஆபிஸ் 148 கோடி ரூபாய் வரை வசூலித்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் லியோ வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
இதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபம் இல்லை என செய்திகள் வெளியாகின. தமிழ்நாடு தியேட்டர்கள் சங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் இதுபற்றி சில பேட்டிகளில் கூறியிருந்தார். "லியோ லாபகரமான படமாக அமையவில்லை, இந்தப் படத்திற்காக தயாரிப்பாளர் 80% ஷேர் வாங்கி உள்ளதாகவும், மீதம் 20% மட்டுமே தியேட்டர் உரிமையாளர்களுக்கு கிடைத்தது" எனக் கூறியிருந்தார்.
"இதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு எந்த பலனும் இல்லை. 80% ஷேர் கொடுத்துவிட்டால் மீதம் இருக்கும் 20% திரையரங்க பராமரிப்புக்கே போதுமானதாக இருக்காது. ஆனால், லியோவுக்கு கேரளா போன்ற வெளிமாநிலங்களில் 60% ஷேர் மட்டுமே வாங்கியுள்ளனர்" எனவும் கூறியிருந்தார். திருப்பூர் சுப்ரமணியம் கொடுத்த பேட்டிகளால் டென்ஷனான தயாரிப்பாளர் லலித் குமார், அவரை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

அதேநேரம் லியோ படத்தின் டிக்கெட் விற்பனையில் தயாரிப்பாளர் லலித் குமார் மோசடி செய்துள்ளதாகவும் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார். அதாவது வெளிநாடுகளில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகளை லலித் குமாரே புக் செய்துவிட்டு, அது ரசிகர்கள் புக் செய்ததாக கணக்கு காட்டியுள்ளார். மேலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் இப்படித்தான் கணக்கு காட்டப்படுகிறது என்று திருப்பூர் சுப்ரமணியம் பகிரங்கமாக பேசியுள்ளார். அவரது இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் சுப்ரமணியத்தின் இந்த பேட்டி விஜய் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது. லியோ ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது டிக்கெட் மோசடி பிரச்சினையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் லியோ திரைப்படம் விஜய் கேரியரில் மிகப் பெரிய தோல்வி என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











