Leo Update: லியோ படப்பிடிப்பை 125 நாட்களில் முடித்த லோகேஷ்... இனி அடுத்தடுத்து மாஸ் ட்ரீட் தான்!
சென்னை: மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கூட்டணி லியோவில் இணைந்தது.
கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் தொடங்கிய லியோ ஷூட்டிங், தொடர்ந்து சென்னை, ஆந்திரா பகுதிகளில் நடைபெற்றது.
லியோ ரிலீஸ் தேதியை படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டதால், படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் நிறைவுப் பெற்றதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்.
லியோ ஷூட்டிங் நிறைவு:மாஸ்டர் படம் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் - லோகேஷ் கூட்டணி, அடுத்து லியோவில் மீண்டும் இணைந்தது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என லோகேஷின் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால், விஜய்யின் லியோ படம் மீதான எதிர்பார்ப்பும் தாறுமாறாக உள்ளது.
விஜய் வாரிசு படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதே, அவரது 67வது படம் குறித்த அப்டேட்டுக்காக தான் ரசிகர்கள் காத்திருந்தனர். முக்கியமாக இப்படத்தில் விஜய்யும் லோகேஷும் மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருந்தது. மேலும் டைட்டில் டீசரிலேயே படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டார் லோகேஷ். அதன்படி லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

பொங்கல் ஸ்பெஷலாக வாரிசு ரிலீஸானதுமே, லியோ படத்தின் அபிஸியல் அப்டேட்டும் வெளியானது. இதனையடுத்து கடந்த ஜனவரியில் தொடங்கிய லியோ ஷூட்டிங்கை வேகமாக நடத்தி வந்தார் லோகேஷ் கனகராஜ். முதல் 60 நாட்கள் வரை காஷ்மீரில் நடைபெற்ற லியோ படப்பிடிப்பு, அடுத்து சென்னையில் தொடர்ந்தது. அதன்பின்னர் ஆந்திராவின் தலக்கோனா பகுதியில் நடைபெற்றது.
இந்நிலையில், லியோ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார். தனது உதவி இயக்குநர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ள லோகேஷ், கிட்டத்தட்ட 6 மாதங்கள் என மொத்தம் 125 நாட்களில் லியோ படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், லியோ படக்குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ள லோகேஷ், இந்த பயணம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இதனை ஒருபோதும் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ்ஜின் இந்த ட்வீட் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அடுத்தடுத்து லியோ படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் லியோ படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமான மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் லியோ, இந்தாண்டின் மெகா பிளாக் பஸ்டர் ஹிட் லிஸ்ட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











