AR Rahman - நானே பலி ஆடு ஆகிறேன்.. மறக்குமா நெஞ்சம் கான்செர்ட்டால் உச்சக்கட்ட விரக்தியில் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னை: AR Rahman Concert (ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட்) மறக்குமா நெஞ்சம் கான்செர்ட் சர்ச்சையை சந்தித்திருக்கும் சூழலில் நானே பலி ஆடு ஆகிறேன் என ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவருகென்று உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது இசை இல்லாமல் நாங்கள் இல்லை என்ற நிலையில் இருக்கக்கூடிய ரசிகர்களும் இருக்கிறார்கள். திரைப்படங்களில் இசையமைப்பதை தவிர்த்து உலகம் முழுவதும் இசை கச்சேரியை தனது குழுவினருடன் நடத்துவது அவரது வாடிக்கை. அதற்கு பெரும் வரவேற்பும் கிடைக்கும்.

சென்னையில் கச்சேரி: தமிழ்நாட்டில் மட்டும் இசை நிகழ்ச்சி நடத்துவதை தவிர்த்து வந்தார். சூழல் இப்படி இருக்க சினிமாவில் அவர் நுழைந்து 30 வருடங்கள் நிறைவடைந்திருப்பதால் மறக்குமா நெஞ்சம் என்ற கான்செர்ட் நடத்தப்படும் என அறிவித்தார். கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. அதற்கான டிக்கெட் விற்பனைகளும் ஜோராக நடந்து முடிந்தது.
மழை: ஆனால் அன்றைய தினம் சென்னையில் கடுமையான மழை பெய்தது. இதனால் நிகழ்ச்சியானது செப்டம்பர் 10ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு நேற்று சென்னை பனையூரில் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை ஏசிடிசி என்ற ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஒருங்கிணைத்தது. ஏற்கனவே ஆகஸ்ட் மாத நிகழ்ச்சிக்கு வாங்கிய டிக்கெட்டுகள் இதற்கும் செல்லும் என அறிவிக்கப்பட்டது. மேலும் புதிய டிக்கெட்டுகளும் நேற்று விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தள்ளுமுள்ளு: 25,000 பேர்வரை கான்செர்ட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 50,000 பேர்வரை குழுமிவிட்டார்கள் என தெரிகிறது. இதன் காரணமாக பல ரசிகர்கள் நிகழ்ச்சி நடந்த மைதானத்துக்குள்ளேயே போக முடியாமல் திணறினர். அதேபோல் வாகனங்களில் வந்தவர்கள் பார்க்கிங் வசதி இல்லாமல் திண்டாடினர். கூட்டம் அளவுக்கதிகமாக வந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிலர் தங்களது குழந்தைகளை காணவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். ஒரு சிலரோ டிக்கெட்டை கிழித்தும் போட்டனர். இதனையடுத்து ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்: இந்த விவகாரம் குறித்து அமைதி காத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்புள்ள சென்னை மக்களே. டிக்கெட் வாங்கியவர்கள் சில துரதிர்ஷ்டவசமான சூழலால் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போனவர்கள் தயவு செய்து உங்கள் டிக்கெட் நகலை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும்" என குறிப்பிட்டிருந்தார்.
நானே பலி ஆடு: இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரக்தியுடன், " சிலர் என்னை GOAT (எல்லா நேரத்திலும் சிறந்தவர்) என்று அழைக்கிறார்கள். இந்த நேரத்தில் எல்லோரும் விழித்துக்கொள்ள நான் பலி ஆடு ஆகிறேன். சென்னையில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வேண்டும், சுற்றுலாத் துறை மேம்பாடு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் திறன், பார்வையாளர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்த வேண்டும், குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பா சூழ்நிலையை உருவாக்குதல் போன்றவற்றை செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











