twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடிவேலுவின் தெனாலிராமன்... கொண்டாடத் தயாராகுங்கள் ரசிகர்களே!

    By Shankar
    |

    மூன்று ஆண்டுகள்... சினிமா வர்த்தகத்தின் உச்சத்திலிருக்கும் ஒரு கலைஞனுக்கு இந்த மூன்றாண்டு கட்டாய இடைவெளி என்பது எத்தனை பெரிய தண்டனை? அதுவும் செய்யாத தவறுக்காக...

    இந்த தண்டனையை அனுபவித்துவிட்டு முதல் முறையாக ஒரு பெரிய படத்தில் நாயகனாக, அதுவும் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் வடிவேலு. அந்தப் படம் வரும் 18-ம் தேதி உலகமெங்கும் தெனாலிராமனாக ரசிகர்கள் வயிற்றைப் பதம் பார்க்கப் போகிறது.

    இந்தப் படத்தை நியாயமாக தமிழ் சினிமாவே கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் மோசமான அரசியல் வியாதியில் பீடித்திருக்கும் தமிழ் சினிமா கமுக்கமாக கள்ள மவுனம் காக்கிறது.

    வடிவேலு நடித்துள்ள படம் ஒரு சரித்திரக் கதை. நாம் வழிவழியாகப் பேசிக் களித்த தெனாலிராமனின் கதை இது. இதில் ஒரு மன்னர் பாத்திரமும் இடம்பெறுகிறது. அது கிருஷ்ணதேவராயர். ஆனால் அந்தப் பெயரைக் குறிப்பிடாமல் மாமன்னன் என்று பெயர் சூட்டியுள்ளனர், தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க.

    அப்படி இருந்தும் இந்தப் படத்தை வெளியிடாமல் தடுக்க வழக்குப் போட்டுள்ளனர் தமிழகத்தில் செட்டிலான தெலுங்குக்காரர்கள் சிலர்.

    கிருஷ்ணதேவராயர் யார்? எப்படி இருந்தார்? அவர் குணமென்ன? என்பதெல்லாம் உண்மையில் ஒருவருக்கும் தெரியாது. கர்ண பரம்பரைக் கதைகள் மாதிரிதான் அவர் பற்றிய கதைகள் எல்லாம். ஆனால் அப்படி ஒரு மன்னர் இருந்தார். அவர் பற்றிய சரித்திரக் குறிப்புகள் சில இருக்கின்றன. மன்னருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். இவைதான் சரித்திர உண்மைகள்.

    இவற்றை வைத்து எத்தனையோ நூறு புத்தகங்கள் புனையப்பட்டுள்ளன. நாடகங்கள், திரைப்படங்கள் என பல படைப்புகள் வந்துள்ளன. அப்போதெல்லாம் வராத எதிர்ப்பு வடிவேலு படத்துக்கு வந்திருப்பதுதான், அந்த எதிர்ப்பின் நோக்கத்தைச் சந்தேகிக்க வைக்கிறது.

    கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்த வடிவேலுவுக்கு என்ன இருக்கிறது... சொல்லப் போனால் ஒரு காலத்தில் இந்த தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்டவர் கிருஷ்ணதேவராயர்தானே... இந்தத் தமிழ் மொழிப் புலவர்களை போற்றிப் பாதுகாத்தவர்தானே அவர். தமிழர்களுக்கும் அவரைப் பற்றிப் படமெடுக்க உரிமை இருக்கிறதே!

    இந்த விஷயத்தில் தமிழ் திரையுலகினர் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று புரியவில்லை. செக்கில் கையெழுத்துப் போட அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர் சங்கம், இனம் படத்துக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்த இயக்குநர்கள் சங்கமோ, சொந்தப் பிரச்சினைகளுக்காக படத்தையே நிறுத்துமளவுக்கு கொக்கரிக்கும் பெப்சியோ வாய் மூடிக் கொண்டிருப்பது யாருக்காக?

    சீமானும், பாரதிராஜாவும் தனிப்பட்ட முறையில் தெரிவித்த ஆதரவை, அமைப்பு ரீதியாக தமிழ் சினிமா காட்டத் தவறியது மிகப் பெரிய தவறு. பல பெரிய அவமானங்களுக்கு வித்திடப் போகும் தவறு.

    எல்லாவற்றுக்கும் ஆட்சி மேலிடத்தைக் காட்ட முயல்வது இன்னும் பெரிய தவறு. முதல்வருக்கு வேறு வேலையே இல்லையா.. இதோ இதே ஆளும்கட்சி சேனல்தான் இன்று முழுக்க பத்து நிமிடத்துக்கு ஒரு முறை வடிவேலு விளம்பரத்தை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது. வடிவேலு படத்துக்கான எதிர்ப்பின் பின்னணியில் இருப்பது வேறு ஏதோ விஷயமத்தனமான நோக்கம்.

    வடிவேலு அடிக்கடி சொல்வதுபோல... அவரது பெயர் ஒவ்வொரு சினிமா ரசிகனின் குடும்ப அட்டையில் இடம்பெறவில்லையே தவிர, வீடுகளில் நிலைத்துவிட்டவர். இன்றைக்கும் தமிழ் சேனல்களை வாழவைக்கும் காமெடி தந்த கலைஞர்களில் முக்கியமானாவர்.

    அப்படி ஒரு கலைஞனை அற்ப அரசியல் காரணங்களுக்காக பலி கொடுக்காமல் காப்பாற்ற வேண்டியது அனைத்து தரப்பினரது பொறுப்புமாகும்.

    தெனாலிராமனை இருகரம் நீட்டி வரவேற்றுக் கொண்டாடுவோம். ஏப்ரல் 18 தமிழ் சினிமாவின் காமெடி திருவிழாவாகட்டும்!

    English summary
    Lets welcome the comedy magnum opus of Vadivelu's Tenaliraman and beat the barriers of the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X