சொந்தக்காரங்க பத்தி அபிநய் சொன்ன விஷயம்.. அம்பானிக்கும் அதான் நிலைமை.. இதுதான் வாழ்க்கை பாடம்
சென்னை: துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் அறிமுமகமானவர் அபிநய். அப்படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் படத்தில் நடித்தவர்களுக்கு நல்ல வெளிச்சம் கிடைத்தது. தனுஷ் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடித்து பெரிய ஹீரோவாகிவிட்டார். ஷெரினும் குறிப்பிட்ட வளர்ச்சியை பெற்றார். ஆனால் அபிநய் மட்டும்தான் பாவம். அவரால் கடைசிவரை பெரிய வெற்றியை பெற முடியவே இல்லை.
கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் ஹீரோவாக அறிமுகமானபோது அவருடன் சேர்ந்து அறிமுகமானவர்களில் அபிநய்யும் ஒருவர். ஹீரோவுக்குரிய முகம், நல்ல திறமை என சினிமாவுக்கு தேவைப்பட்ட அத்தனையும் இருந்தது. படத்திலும் அவரது நடிப்பு ஒரு ஹை க்ளாஸாகவே இருந்தது. இதன் காரணமாக ஹீரோவாக அறிமுகமான தனுஷைவிடவும் இவர்தான் பெரிதாக வளர்வார் என்று அப்போது அனைவருமே பேசினார்கள்.
சில படங்கள் மட்டுமே: அப்படத்துக்கு பிறகு ஜங்ஷன், சிங்கார சென்னை, தாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பணியாற்றினார். ஆனால் அவர் எதிர்பார்த்த திருப்புமுனை தரும் வெற்றி கிடைக்கவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தார். சினிமாவில் கிடைத்த அத்தனை பணிகளையும் எந்த ஈகோவும் இல்லாமல் செய்தார். சில படங்களுக்கு டப்பிங்கும் பேசியிருக்கிறார்.

ஒதுங்கிய அபிநய்: போராடிக்கொண்டே மட்டும் இருந்தால் போதுமா? அதற்கான பலன் கிடைத்தால்தானே கொஞ்சம் தெம்பு கிடைக்கும். அந்தத் தெம்பு அபிநய்க்கு கிடைக்கவே இல்லை. இதனால் ஒருகட்டத்தில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்ந்துபோய்விட்டார். பற்றாக்குறைக்கு அவருக்கு கல்லீரல் தொடர்பான நோயும் வந்துவிட்டது. இதனால் மொத்தமாக சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார்.
உதவிய பாலா: எல்லோருமே அபிநய் என்ற ஒருவரை மறந்தே போய்விட்டார்கள். திடீரென சில மாதங்களுக்கு முன்பு ஆளே உருக்குலைந்து போய் இருந்த நிலையில் அவரது புகைப்படம் வெளியானது. அதைப் பார்த்து பெரிய அதிர்ச்சியடைந்தார்கள் ரசிகர்களும், திரைத்துறையினரும். உடனடியாக கலக்கப்போவது யாரு பாலா நேரில் சென்று அவரை சந்தித்து ஆறுதல் சொல்லி உதவி செய்தார். இன்னும் சில சினிமா பிரபலங்களும் உதவி செய்ததாக தெரிகிறது.
உயிரிழந்த அபிநய்: அதனையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து சினிமா விழாக்களில் கலந்துகொள்வது, யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது என இருந்தார். சில படங்களில் நடிப்பதற்கும் அவர் கமிட்டாகியிருந்ததாக கூறப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் நேற்று அவர் உயிரிழந்தார். அவர் தான் குடியிருந்த வாடகை வீட்டில் அருகே யாரும் இல்லாத நிலையில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். விஷயம் வெளியே தெரிந்து பாலா உள்ளிட்டோர் வந்து இறுதி நிகழ்வுகளை செய்தார்கள்.
அபிநய்யின் பேட்டி: இந்நிலையில் அபிநய் கடைசியாக கொடுத்த பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் அந்தப் பேட்டியில், "யாருமே ஒரு ரூபாய் கொடுக்கமாட்டாங்க. இந்த உலகம் யாருடையதும் கிடையாது. வாழ்க்கையில் சொந்தக்காரங்களே பார்க்கமாட்டாங்க. நண்பர்கள்கூட பார்ப்பார்கள். என்ன கொண்டு போகப்போறோம். கடைசியில் பானையில்தான் போவோம். அவ்வளவு பெரிய அம்பானியாக இருந்தாலும் பானைதான். இவ்வளவுதான் வாழ்க்கை. எனக்கு நிறைய பேர் உதவினார்கள். விஜய் சேதுபதியெல்லாம் கடவுள் போன்றவர். அவருடன் நடிக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











