லைஃப் டைம் செட்டில்மென்ட் லெட்டர்.. விக்ரம் வெற்றி.. லோகேஷுக்கு கமல் கைப்பட எழுதிய கடிதம்!
சென்னை: விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் கைப்பட எழுதியுள்ள அன்பு கலந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
சிறு வயது முதலே யார் படங்களை பார்த்து ரசித்து, சினிமாவுக்கு வந்தாரோ அவர் தயாரிப்பில், அவர் நடிக்க 4வது படமே அவருடன் பண்ணுவேன் என கனவிலும் லோகேஷ் கனகராஜ் நினைத்திருக்க மாட்டார்.
ஆனால், அது நிகழ்ந்து விட்டது. விக்ரம் படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக ஹிட் அடித்து நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

கமல் கைப்பட எழுதிய கடிதம்
அன்பு லோகேஷ் பெயருக்கு முன் திரு போடாமல் விட்டது விபத்தல்ல. திரு கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலே நான் எடுத்துக் கொண்டு விட்டேன் இது நமக்குள்ள தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி உங்கள் சாதனைகள் காண பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும் பொதுவெளியில்.

ரசிகரே இயக்குநராக
என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்தியாசமானவர்கள் ஆக இருப்பது அவசியம் என்ற என் ஆசை.. பேராசை என்றனர் என் விமர்சகர்கள். ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணி திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம்.

பாராட்ட வார்த்தைகள் இருக்கு
உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உள்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூட்யூபில் இருந்தால் வார்த்தையின் களஞ்சியமே தென்படும் அதில் உள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுத்துக்கொள்ளலாம்.

அன்ன பாத்திரம்
இவையெல்லாம் தொடர வாழ்த்துக்கள் அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்து இருங்கள் உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும் உங்கள் நான் கமலஹாசன் என லோகேஷுக்கு தனது கைப்பட இப்படியொரு கடிதத்தை எழுதி உள்ளார் கமல்.

லைஃப் டைம் செட்டில்மென்ட் லெட்டர்
இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு தனிப்பட்ட முறையில் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள விக்ரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லைஃப் டைம் செட்டில்மென்ட் லெட்டர் என கேப்ஷன் போட்டு தனது சந்தோஷத்தை தெரிவித்துள்ளார் விக்ரம் படம் வெளியான 3 நாட்களிலேயே உலகளவில் 150 கோடி வசூலை கடந்துள்ளது. திங்கட்கிழமையும் பல இடங்களில் ஹவுஸ்ஃபுல்லாக படம் ஓடி வருவதாக ரிப்போர்ட்டுகள் வந்துள்ளன.


Click it and Unblock the Notifications











