ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.. சூப்பர் வாழ்த்து சொன்ன வைரமுத்து.. அனைத்தையும் அடுக்கிருக்காரு
சென்னை: ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 வருடங்களை நிறைவு செய்ததற்காக கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதை பெற்ற ரஜினிக்கு பலரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்துவருகிறார்கள். அந்தவகையில் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து தனது பாணியில் வாழ்த்து கூறியிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 வருடங்கள் நிறைவு செய்திருக்கிறார். இத்தனை வருடங்களை அவர் நிறைவு செய்திருந்தாலும் இப்போதும் சலிப்பில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். சூழல் இப்படி இருக்க 50 வருடங்களை நிறைவு செய்தமைக்காக அவருக்கு கோவாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்ட அவர், 'இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் ரஜினிகாந்த்தாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்' என நெகிழ்ச்சியோடு பேசியிருந்தார்.
வைரமுத்து வாழ்த்து: விருது பெற்ற ரஜினிக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகிறார்கள். அந்தவகையில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில், "வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் ரஜினி அவர்களை வாழ்த்துகிறோம்.

அவரது
தாழாத கீர்த்திக்கும்
வீழாத வெற்றிக்கும்
சில காரணங்கள் உண்டு
அவரது வாழ்வின் முன்னுரிமை
உழைப்புக்கு; பிறகுதான்
மற்றவற்றுக்கு
கலைஉலகம் தந்த புகழை
வேறு சந்தைகளுக்கு அவர்
மடைமாற்றம் செய்வதில்லை
ரசிகனுக்கும் தனக்குமுள்ள
நெருக்கம் தூரம் இரண்டுக்கும்
எல்லைகட்டத் தெரியும்
உணவு உடற்பயிற்சி
இரண்டினாலும்
தொப்பையற்ற தோற்றத்தைத்
தொடர்ந்து காப்பாற்றுகிறார்
தான் பின்தங்கிவிடாமல்
மாறும் தலைமுறையோடு
மாறாமல் பயணிக்கிறார்
சமூகம் அவரைச்
சர்ச்சைக்கு இழுத்தாலும்
சர்ச்சைகளை அவர்
திட்டமிட்டு உண்டாக்குவதில்லை
கர்வம் என்பது
தனியறையில் இருந்தாலும்
பணிவு என்பதைப்
பொதுவெளியில் காட்டுகிறார்
'இமயமலை ஆகாமல்
எனதுஉயிர் போகாது
எல்லையைத் தொடும்வரை
எனது கட்டை வேகாது'
என்ற வரிகளை
வாழ்ந்துகாட்டத் துடிக்கிறார்.
தான் நன்றாக இருக்கவேண்டும்;
அதுபோல் எல்லாரும்
என்று நினைக்கிறார்
வாழ்க பல்லாண்டு!" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வாழ்த்து ட்வீட் இப்போது சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது. முன்னதாக, ரஜினிகாந்த்துக்கு வைரமுத்து ஏகப்பட்ட பாடல்களை திரைப்படங்களில் எழுதியிருக்கிறார். அந்தப் பாடல்கள் பெரும்பாலும் ரஜினியை உயர்த்தி பிடிப்பவையாக இருந்தன. குறிப்பாக எம்ஜிஆருக்கு எப்படி வாலி எழுதிய வரிகள் தமிழ்நாட்டு மக்களிடையே அவரது பிம்பம் உயர உதவி செய்ததோ; அதேபோன்று ரஜினியின் பிம்பத்தையும் வைரமுத்துவின் வரிகள் மக்களிடம் எளிதாக சேர்த்ததாகவும், உயர்த்தியதாகவும் ஒரு பேச்சு உண்டு என்பதும் தற்போது வைரமுத்து ரஜினியின் எந்தப் படத்துக்கும் பாடல்கள் எழுதுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











