மார்கழி திங்கள் படப்பிடிப்பு தளத்தை தாக்கிய மின்னல்.. நூலிழையில் உயிர் தப்பிய 5 பேர்.. செம ஷாக்!
சென்னை: மின்னல் தாக்கினால் மின்னல் வீரன் எல்லாம் ஆக முடியாது என பரிதாபங்கள் யூடியூப் சேனலில் நேற்று சூப்பர் ஹீரோ பரிதாபங்கள் வீடியோ வெளியானது.
இந்நிலையில், இயக்குநர் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் பாரதிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் மார்கழி திங்கள் படப்பிடிப்பு தளத்தை மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் சுசீந்திரன் இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில், இந்த விபத்து குறித்து மிகவும் உருக்கமாக பேசி உள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அப்பாவை போல: இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா ஹீரோவாக தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமானார். வருசமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தார். சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தம்பியாக நடித்திருந்தார். அதன் பின்னர் ரஜினிக்கு டூப்பாக எந்திரன் படத்தில் தொழில்நுட்பக் கலைஞராக மாறினார்.
இந்நிலையில், சமீப காலமாக அப்பாவை போல இயக்கத்தில் ஆர்வம் கொண்டுள்ள மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் மார்கழி திங்கள் எனும் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பாரதிராஜா லீடு ரோலில் நடித்து வருகிறார்.

மின்னல் விபத்து: பழனிக்கு அருகே கணக்கம்பட்டி எனும் கிராமத்தில் உள்ள காட்டுக்கோயிலில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. மேலும், அதனை தொடர்ந்து சோளக் காட்டுக்குள் சில காட்சிகளை படமாக்க பெரிய ஏணிகள் அமைக்கப்பட்டு கோடா லைட்டுகளை எல்லாம் கட்டி படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது.
அப்போது அந்த பகுதியில் திடீரென மழை பெய்யத் தொடங்கியதால் படப்பிடிப்பை நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென தாக்கிய மின்னல் காரணமாக ஒரு பெரிய கோடா லைட்டே கீழே விழுந்து நொறுங்கி விட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரன் தற்போது மனவேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

5 பேர் உயிர் தப்பினர்: இந்த விபத்தில் லைட்மேன்கள் 5 பேர் சம்பவ இடத்தின் மிக அருகில் நின்றுக் கொண்டிருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அவர்கள் 5 பேரும் தப்பித்து விட்டனர் எனக் கூறிய சுசீந்திரன், கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தாலும், அவர்களையும் இழந்திருப்போம் என குரலில் நடுக்கத்துடன் பேசிய வீடியோ காட்சிகள் ரசிகர்களையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தயாரிப்பாளராக லைட்டுகள் சேதம் ஆனது அவருக்கு இழப்பாக இருந்தாலும், லைட்மேன்கள் தப்பித்தது பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











