LIK Box Office: உலகளவில் முதல் நாள் LIK வசூல் இவ்வளவு தானா?.. விக்னேஷ் சிவன் செய்த வீண் செலவு, வருமா?
சென்னை: தமிழ்நாட்டில் மக்கள் மொத்தமும் தேர்தல் பரபரப்பில் இருக்கின்றனர். மேலும், திடீரென லீக்கான விஜய்யின் ஜன நாயகன் படத்தை திருட்டுத் தனமாக பதிவிறக்கம் செய்து எச்.டி தரத்தில் வீடுகளில் பார்த்து வருகின்றனர். இதற்கு நடுவே விக்னேஷ் சிவனின் LIK ரிலீஸ் ஆகி சிக்கிக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.
விஜய்யின் துப்பாக்கி படத்தின் இடைவேளையில் அவர் சுட்ட 13வது ஆள் நான் தான் என சிம்புவை வைத்து இயக்கிய போடா போடி படம் படுதோல்வியை சந்தித்ததை ஒப்புக் கொண்டார் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தை உருவாக்க பாண்டிச்சேரிக்கு போக பர்ஸில் 250 மட்டுமே இருக்கும் அளவுக்கு அவரது முதல் படம் அவரை படாதபாடு படுத்தி விட்டது.

இந்நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பல தடைகளை தாண்டி வெளியான நிலையில், விஜய்யின் ஜனநாயகன் லீக் ஆகியிருப்பது மீண்டும் விக்னேஷ் சிவனுக்கு பலத்த அடி கொடுக்கும் என்கின்றனர்.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட்ஜெட்: விக்னேஷ் சிவன் டைரக்டர் ஷங்கர் போல பிரம்மாண்டமாக இந்த படத்தை 2040ல் நடப்பதை போல காட்ட வேண்டும் என மெனக்கெட்டு அனிருத் இசை, ரவி வர்மன் ஒளிப்பதிவு, மலேசியாவில் ஷூட்டிங் என படத்தை குவாலிட்டியாக காட்ட வேண்டும் என்பதற்காக சுமார் 90 கோடி செலவில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் என்கின்றனர். விஷுவல் எஃபெக்ட்ஸ், ரோபோக்கள், பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், க்ரித்தி ஷெட்டி, கெளரி கிஷன், யோகி பாபு, மாளவிகா என நடிகர் பட்டாளத்துக்கும் நிறைய சம்பளம் கொடுத்ததன் விளைவு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பட்ஜெட் படமாக இந்த படம் மாறியது. டிராகன் படத்தின் பட்ஜெட் 37 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் 150 கோடி வசூல் செய்த நிலையில், வெற்றியடைந்தது.
உலகளவில் முதல் நாள் வசூல்: இந்தளவுக்கு பட்ஜெட் போட்டு படம் எடுத்தால் முதல் நாளே குறைந்த பட்சம் 30 கோடிக்கு மேல் படம் வசூல் செய்தால் தான் முதல் 3 நாட்களில் போட்ட காசை எடுக்க முடியும். ஆனால், ஏப்ரல் 10ம் தேதி வெளியான எல்ஐகே திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 9.93 கோடி வசூல் செய்துள்ளது. சனி மற்றும் ஞாயிறு படம் பிக்கப் ஆனால், நல்ல வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தாய் கிழவி போல தொடர்ந்து சில வாரங்கள் படம் வெற்றிகரமாக ஓடினால் மட்டுமே பிரேக் ஈவன் அடையும் என்கின்றனர்.
நயன்தாராவுக்கு நஷ்டமா?: படத்தின் தயாரிப்பாளரான நயன்தாரா ரெட் ஜெயண்ட் மூவிஸ் இன்பன் உதயநிதியிடம் பெரிய தொகைக்கு படத்தின் தமிழ்நாட்டு உரிமையை விற்றுவிட்டார் என்கின்றனர். மேலும், அமேசான் பிரைம் நிறுவனம் இந்த படத்தின் ஓடிடி உரிமத்தையும் நல்ல விலைக்கு வாங்கியிருப்பதாக கூறுகின்றனர். அனிருத் இசை என்பதால் ஆடியோ ரைட்ஸ் உள்ளிட்ட தரப்பில் இருந்தும் வருமானம் வரும் என்கின்றனர். போட்ட காசை தயாரிப்பாளர்கள் எடுத்து விடுவார்கள். ஆனால், படம் பாக்ஸ் ஆபீஸில் பிளாக்பஸ்டர் அடிக்குமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











