சிவி சண்முகம் வீட்டிலேயும் இறங்கிய புது ஷோபா.. புஷ்பா 2 பாணியா? என கேள்வி எழுப்பிய பிரபலம்!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றார் விஜய். அதனையடுத்து கோப்புகளில் கையெழுத்திடுவது, அதிகாரிகளுடன் ஆலோசனை, 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு என பணிகளையும் தொடங்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி மாற்று கட்சி தலைவர்களையும் அவர் சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான பெரும்பான்மையான எம்.எல்.ஏக்களும் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்; காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி ஆதரவோடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். கட்சி ஆரம்பித்ததிலிருந்தே திமுகவைத்தான் விஜய் டார்கெட் செய்தார். அப்படிப்பட்ட விஜய்க்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவை கொடுத்தது ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது. ஆதரவு கொடுத்த கட்சிகளில் காங்கிரஸ் மட்டும்தான் திமுகவுடனான கூட்டணியை முறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் சந்திப்புகள்: முதலமைச்சராக பதவியேற்று பணிகளையும் தொடங்கிவிட்டார் விஜய். மூன்று கோப்புகளில் கையெழுத்து, 717 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகளை செய்திருக்கிறார். மேலும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். இது ஒருபக்கம் இருக்க நேற்று திடீரென மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வைகோ, சீமான், அன்புமணி ராமதாஸ் என பலரையும் சந்தித்தார். அவர் இப்படி செய்திருப்பது நாகரீக அரசியலின் வெளிப்பாடு என்ற புகழாரங்களும் வந்திருக்கின்றன.
விஜய்க்கு ஆதரவு: இதற்கிடையே இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்தது அதிமுக. அந்தக் கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல்கள் எழுந்துவிட்டன. எனவே அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக எஸ்.பி.வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும், வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். அநேகமாக இன்று மாலை இந்த சந்திப்பு நிகழலாம் என்று சொல்லப்படுகிறது.
புதிய ஷோஃபாக்கள்: இந்நிலையில் சி.வி.சண்முகம் வீட்டுக்கு புது ஷோஃபாக்கள் வந்து இறங்கியிருக்கின்றன. மேலும் பூங்கொத்துக்களும் ஏராளமாக வந்திருக்கின்றன. எனவே இன்று மாலை சண்முகம் வீட்டுக்கு விஜய் வரலாம் என தெரிகிறது. இந்தக் காட்சிகளை பார்த்த ரசிகர்களோ, 'புஷ்பா 2 படத்தில் இப்படித்தான் அரசியல்வாதி வீட்டுகளுக்கு வித விதமாக ஷோஃபாக்கள் இறங்கும். இதையெல்லாம் பார்க்கையில் அதுதான் நியாபகத்துக்கு வருகிறது' என்று கூறிவருகிறார்கள். பிரபல திரை விமர்சகரான பிரசாந்த்தும் அதையே குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக திருமாவளவனை சந்திக்க விஜய் வருவதாக சொன்னபோதும் இதே மாதிரி விசிக அலுவலகத்தில் புதிய ஷோஃபா இறங்கியது நினைவுகூரத்தக்கது.
சண்முகம் பேட்டி: முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம், 'திமுகவை எதிர்த்து பல தலைமுறைகளாக அரசியல் செய்துவருகிறோம். ஆனால் திமுகவுடன் ஆதரவுடன் தன்னை முதலமைச்சராக்க முயற்சிகள் நடக்கிறது. அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என பழனிசாமி கேட்டுக்கொண்டார். அதை கேட்டு எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அதை அவர் செயல்படுத்தியே ஆக வேண்டும் என முயன்றார். நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே பெரும்பான்மையான அதிமுக எம்.எல்.ஏக்களை கூட்டி தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பது என முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
