உத்தமவில்லனைத் தொடர்ந்து கமலுடன் மீண்டும் கைகோர்க்கும் லிங்குசாமி?
சென்னை: ரஜினிமுருகன் வெற்றியால் நடிகர் கமல்ஹாசனை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிக்கும் முடிவிற்கு வந்திருக்கிறாராம் இயக்குநர் லிங்குசாமி.
கமல் நடிப்பில் வெளியான உத்தமவில்லன் திரைப்படம் தயாரிப்பாளரும், இயக்குநருமான லிங்குசாமிக்கு மிகப்பெரிய தோல்வியைப் பரிசளித்தது.
அஞ்சான், உத்தமவில்லன் போன்ற படங்களின் அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அதலபாதாளத்தில் தள்ளப்பட்டது நாம் அறிந்த கதைதான்.

இந்தத் தோல்விகளின் தாக்கத்தால் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் பலமுறை தள்ளிப்போய் ஒருவழியாக இந்தப் பொங்கல் தினத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் ரஜினிமுருகன் அளித்த லாபத்தால் மீண்டும் கமலை வைத்து ஒரு படம் இயக்கும் முடிவிற்கு இயக்குநர் லிங்குசாமி வந்திருப்பதாக கூறுகின்றனர்.
கமலுக்காக, இயக்குநர் லிங்குசாமி இரவு,பகலாக கண்விழித்து ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளாராம். அந்த கதையில் கமல் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
இந்த படத்தை லிங்குசாமியே இயக்கப்போவதாகவும், இதில் கமல் பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குவதோடு லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
இவருடன் பென் மூவிஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கப்போவதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்திற்கும் பென் மூவிஸ் உதவியது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் -லிங்குசாமி கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











