கோலிவுட்ல இருந்து ஒரு ராஜமெளலி ரெடியாகுறாரு போல.. மகாபாரத படத்தை இயக்கும் லிங்குசாமி?
சென்னை: ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. முதல் படத்திலேயே மம்மூட்டி, முரளி, அப்பாஸ், சினேகா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை நடிக்க வைத்து வெற்றியும் பெற்றார்.
அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான ரன் படத்தை இயக்கியிருந்தார் லிங்குசாமி. ரன் படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான ஜி படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

சக்கை போடு போட்ட சண்டக்கோழி: 2005ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை ஆடியது. ரன் படத்திற்கு பிறகு லிங்குசாமிக்கு மெகா பிளாக்பஸ்டர் ஹிட் படமாக சண்டக்கோழி மாறியது. நடிகர் விஷாலுக்கும் அந்த படம் பெரிய படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
பல படங்கள் ஃபிளாப்: சண்டக்கோழி வெற்றிக்கு பிறகு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பல படங்கள் படுதோல்வியை சந்தித்தன. சியான் விக்ரமை வைத்து இயக்கிய பீமா பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியும் வெற்றி பெறவில்லை. கார்த்தியை வைத்து இயக்கிய பையா திரைப்படம் சுமாராக ஓடியது. ஆர்யா மற்றும் மாதவன் நடித்த வேட்டை திரைப்படம் ஓரளவுக்கு ஓடியது.
ஆனால் அதன்பின்னர் சூர்யாவை வைத்து இயக்கிய அஞ்சான் திரைப்படம் பெரிய ட்ரோல் மெட்டீரியல் ஆனது. மீண்டும் விஷாலை நம்பி சண்டக்கோழி 2 படத்தை இயக்கினார். மீரா ஜாஸ்மினுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் நடித்த அந்த படம் வெற்றி பெறவில்லை. கடைசியாக ராம் பொத்தினேனியை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தி வாரியர் எனும் படத்தை இயக்கி கம் பேக் கொடுக்க நினைத்தார் லிங்குசாமி. ஆனால் அந்த படத்தில் புல்லட்டு பாடல் தவிர மற்ற எல்லாமே பெரும் சொதப்பலாக சொதப்பியது.

மகாபாரதக் கதை: இந்நிலையில், அடுத்ததாக மகாபாரதக் கதையை மையப்படுத்தி பிரம்மாண்டமாக ஒரு இதிகாச படத்தை பான் இந்தியா படமாக லிங்குசாமி இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலமாக, ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை வைத்து ஏகப்பட்ட படங்கள் இந்திய சினிமாவில் உருவாகி வருகின்றன. இந்த ஆண்டு சங்கராந்தி தெலுங்கில் வெளியான ஹனுமான் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று 300 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. தொடர்ந்து பல இயக்குநர்களும் இதிகாச படங்களையும் ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளையும் படமாக்க முடிவு செய்திருக்கின்றனர்.
தயாரிப்பு நிறுவனங்கள் தயார்: வட இந்தியாவில் அதுபோன்ற படங்கள் வேறலெவலில் வசூலை ஈட்டி வரும் நிலையில், பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடியாக அது போன்ற படங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக கூறுகின்றனர். ராமாயண கதையை வைத்து ரன்பீர் கபூர் ஒரு படம் நடிக்க உள்ளார். கர்ணன் கதையை வைத்து சூர்யா ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். இந்நிலையில், லிங்குசாமி மகாபாரதக் கதையை இயக்கப் போகிறாராம். விரைவில், அந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











