இந்த வாரம் தியேட்டரில் இத்தனை படங்கள் ரிலீஸா? இதில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் யாருக்கு கிடைக்கும்!
சென்னை: தீபாவளி ஸ்பெஷலாக வெளியான சர்தார், பிரின்ஸ் திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தன.
தீபாவளி விடுமுறைகளுக்குப் பிறகு இந்த வாரமும் சில தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.
அதில் எந்தப் படங்களுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது, எது பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கும் என பார்க்கலாம்.

தீபாவளி ரிலீஸ்
செப்டம்பர், அக்டோபர் என இரண்டு மாதங்களிலும் முக்கியமான தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் வெளியான. செப்டம்பரில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு, இறுதியில் நானே வருவேன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய படங்கள் ரிலீஸாகின. இதில், பொன்னியின் செல்வன், சர்தார் படங்களுக்கு நல்ல பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கிடைத்தது.

இந்த வாரம் ரிலீஸ்
தொடர்ந்து இரண்டு மாதங்களாக பெரிய பட்ஜெட் படங்கள் வெளியான நிலையில், இந்தவாரம் சின்ன பட்ஜெட் படங்கள் வரிசையாக ரிலீஸாகின்றன. சுந்தர் சி இயக்கியுள்ள 'காஃபி வித் காதல்' படம் நாளை (நவ 4) வெளியாகிறது. ஏற்கனவே திரையரங்குகள் கிடைக்காமல் இந்தப் படம் ஒருமுறை ரிலீஸ் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திரப்பட்டாளங்களுடன் வெளியாகும் இந்தபடத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது வழக்கமான சுந்தர் சி-யின் காமெடி ஜானரில் இருக்கும் என்பதால், ரசிகர்களுக்கு நல்ல எண்டர்டெயின்மெண்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நித்தம் ஒரு வானம்
அதேபோல், அசோக் செல்வன் நடித்துள்ள 'நித்தம் ஒரு வானம்' படமும் நாளை வெளியாகிறது. ரா.கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவதா, சிவாத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். இது ஃபீல்குட் படமாக இருக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. தொடர்ச்சியாக வெரைட்டியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் அசோக் செல்வனுக்கு, நித்தம் ஒரு வானம் நல்ல கம்பேக் கொடுக்கும் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லவ் டுடே
காஃபி வித் காதல், நித்தம் ஒரு வானம் படங்களைத் தொடர்ந்து ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் மற்றொரு படம் 'லவ் டுடே.' கோமாளி படம் மூலம் கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கியுள்ளதோடு, அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் சத்யராஜ், இவானா ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படம் இளைஞர்களுக்கு கமர்சியல் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

பனாரஸ், 4554
மேலும், ஜெயதீர்த்தா இயக்கியுள்ள பனாரஸ், கர்ணன் மாரியப்பன் இயக்கியுள்ள 4554 ஆகிய படங்களும் நாளை வெளியாகின்றன. பனாரஸ் படத்தில் ஜையித் கான் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக சோனல் மாண்டீரோ நடித்துள்ளார். காதலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இது பான் இந்தியா படமாக நாளை வெளியாகிறது. அதேபோல், அசோக் ஹீரோவாக நடித்துள்ள 4554 படமும் நாளை திரையரங்குகளில் ரிலீஸாகிறது. மேலும், தங்கவேலு கண்ணன் என்பவர் இயக்கி, வசனம் எழுதி, தயாரித்து நடித்துள்ள "கண்டேன் உன்னை தந்தேன் என்னை" படமும் நாளை வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











