அஜித்தால் வாழ்வுப் பெற்ற இயக்குநர்கள்... வாய்ப்பு மட்டும் இல்லை காரும் பரிசளித்த ஏகே!
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகரான அஜித் இதுவரை 61 படங்களில் நடித்துள்ளார்.
விரைவில் அவரது ஏகே 62 திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஒரு காலத்தில் அறிமுக இயக்குநர்களுக்கு கால்ஷீட் கொடுத்து அவர்களையும் வளர்த்துவிட்ட பெருமை அஜித்துக்கு மட்டுமே உண்டு.

அஜித்தின் அறிமுக இயக்குநர்கள்
தமிழ்த் திரையுலகில் நடிகர் அஜித் குமாருக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதேபோல் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடத்திலும் அவருக்கு நலல் மரியாதை உண்டு. இதற்கெல்லாம் காரணம் தான் டாப் ஹீரோவாக வளர்ந்து வந்த காலத்தில் அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து அவர்களையும் உயரே தூக்கிவிட்டது தான். அந்த வரிசையில் எஸ்ஜே சூர்யா, ஏஆர் முருகதாஸ், சரவண சுப்பையா, சிங்கம் புலி, சரண் ஆகியோருக்கு முதன்மையான இடம் உள்ளது.

காதல் மன்னன் - சரண்
அஜித் நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான காதல் மன்னன் அப்போதையை 90ஸ் கிட்ஸ்களின் கொண்டாட்டமான படமாக மாறியது. பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்த சரண் இப்படம் மூலம் இயக்குநரானார். அஜித்துடன் மறைந்த நடிகர் விவேக், இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் ஆகியோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்போது வரையில் இந்தப் படம் ட்ரெண்ட் செட்டிங்கில் இருப்பது தான் அஜித் - சரண் கூட்டணியின் மேஜிக். இதனைத் தொடர்ந்து அமர்க்களம், அசல் போன்ற படங்களிலும் இக்கூட்டணி இணைந்தது.

எஸ்ஜே சூர்யா - வாலி
அஜித்தின் கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் வாலி. 1999ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மூலம் எஸ்ஜே சூர்யா இயக்குநராக அறிமுகமானார். அஜித் முதன்முறை ஆண்டி ஹீரோவாக நடித்தது இப்படத்தில் தான். அஜித் ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தாலும், ஜோதிகாவும் இதில் தான் நடிகையாக என்ட்ரி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் கதை சொல்லப்போன எஸ்ஜே சூர்யாவுக்கு கால்ஷீட் கொடுத்ததோடு, புதிய சாண்ட்ரோ காரும் வாங்கி பரிசளித்தவர் அஜித். இன்று எஸ்ஜே சூர்யா முன்னணி இயக்குநராக மட்டும் இல்லாமல் முக்கியமான நடிகராகவும் கலக்கி வருகிறார்.

ஏஆர் முருகதாஸின் தீனா
ரொமாண்டிக் பாய் அஜித்தை முதன்முறையாக ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய தீனா திரைப்படம். எஸ்ஜே சூர்யாவிடம் உதவியாளராக இருந்து அதன் மூலம் அஜித்தின் கால்ஷீட்டை வாங்கினார் ஏஆர் முருகதாஸ். இறுதியாக அஜித் - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியான தீனா பட்டையைக் கிளப்பியது. அஜித்துக்கு தல என்ற பட்டம் கிடைத்ததும் இந்தப் படத்தில் தான். அஜித், லைலா, சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார். ஏஆர் முருகதாஸுக்கும் கார் வாங்கிக் கொடுத்து சர்ப்ரைஸ் செய்தார் அஜித்.

சிட்டிசன், ரெட்
அதேபோல், அஜித் கேரியரில் ரெடி, சிட்டிசன் இந்த இரண்டு படங்களும் முக்கியமானது. சிட்டிசன் திரைப்படம் மூலம் சரவண சுப்பையா இயக்குநராக அறிமுகமானார். ரெட் படம் மூலம் சிங்கம் புலி இயக்குநரானார். இருவருக்கும் அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் அமையவில்லை என்றாலும், நடிகர்களாக தொடர்ந்து ஃபீல்ட்டில் வலம் வருகின்றனர். முக்கியமாக அஜித்தும் சிங்கம் புலியும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுத்த அஜித்தை நம்பி 1990களில் பல உதவி இயக்குநர்கள் அவரது கால்ஷீட்டுக்காக காத்திருந்ததும் அப்போது நடைபெற்றது.


Click it and Unblock the Notifications











