2021ல் தமிழில் வெளியான மிகச்சிறந்த டப்பிங் திரைப்படங்கள்!
சென்னை : மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்கள் அவ்வப்போது தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகின்றன
அவ்வாறு மிகச்சிறந்த கதை அம்சத்துடன் வெளியாகும் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் 2021ல் மற்ற இந்திய மொழிகளில் வெளியாகி பாராட்டுக்களை பெற்ற மிகச்சிறந்த மூன்று படங்களை இங்கு நாம் காண்போம்.

வைல்ட் டாக்
தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நாகார்ஜுனா தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்து இங்கும் பிரபலமாக உள்ளார். இருப்பினும் இப்போது தெலுங்கில் முழு கவனத்துடன் நடித்து வரும் இவரது திரைப்படங்கள் அவ்வப்போது தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வைல்ட் டாக். இந்திய ராணுவத்தினர் நடத்திய நேபால் அண்டர் கவர் ஆபரேஷனை மையமாகக் கொண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தமிழிலும் வைல்ட் டாக் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலை வாரி குவித்தது

மரைக்காயர்
நடிகர் மோகன்லாலின் அட்டகாசமான நடிப்பில் மலையாள மொழியில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மரக்கார். சுனில் ஷெட்டி ,கீர்த்தி சுரேஷ், ஆக்சன் கிங் அர்ஜுன், மஞ்சு வாரியர், கல்யாணி பிரியதர்ஷன், சுகாசினி, பிரபு,அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் சரித்திர பின்னணியில் உருவானது. மலையாள சினிமாவின் பிரம்மாண்டமாக வெளியான மரக்கார் தமிழில் "மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் " என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. மலையாளத்தை போலவே தமிழிலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.

குருப்
தென்னிந்தியாவில் இளம் நடிகராக ஜொலித்துக் கொண்டுள்ள துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. அந்த வகையில் சமீபத்தில் துல்கர் சல்மான் மலையாளத்தில் நடித்த திரைப்படம் குருப். ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவான இந்தப்படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியிருந்தார். துல்கர் சல்மானின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தமிழிலும் வெளியாகி பட்டையை கிளப்பியது. சாக்லேட் பாயாக தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான துல்கர் சல்மான் குருப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவிதமான அனுபவத்தை கொடுத்திருந்தது. பார்ப்பதற்கு மலையாள படம் என்ற தோன்றலே இல்லாமல் அனைத்து மொழி ரசிகர்களையும் இப்படம் வெகுவாக கவர்ந்திருந்தது. குறிப்பாக இந்த படம் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் அதன் தாக்கம் படம் பார்த்த பின்னரும் ரசிகர்களுக்கு அப்படியே இருந்தது இப்படத்திற்கு மற்றுமொரு வெற்றியாக அமைந்தது.

தமிழ் மொழியில் டப்பிங்
மொழி ஒரு தடை இல்லை என்று நிரூபித்த பல திரைப்படங்கள் இந்திய சினிமாவில் உள்ளது. அப்படிப்பட்ட பல நல்ல படங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு சிறு சிறு திருத்தங்கள் செய்து நல்ல டப்பிங் கலைஞர்களை பயன்படுத்தி படத்தின் பிரம்மாண்டத்தை, மற்றும் மையக்கருத்தை பலதரப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் ஒரு நல்ல கலைஞனுடைய கடமையாகும்.
அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு பல நல்ல கதைகள் தமிழ் மொழியில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட முயற்சிகள் எப்போதும் வரவேற்பை பெறுகிறது . அது மட்டும் இல்லாமல் இதனால் டப்பிங் கலைஞர்கள் மற்றும் டப்பிங் என்ற அந்த தொழில் மிகப்பெரிய அளவில் உபயோகமாக கலை உலகத்திற்கு இருந்து வருகிறது. இன்னும் நிறைய டப்பிங் வெற்றி படங்கள் வரும் காலங்களில் வரும் என்று எதிர்பார்க்க படுகிறது .


Click it and Unblock the Notifications











