அக்கா, ஓவரா சீன் போட்டா உடம்புக்கு ஆகாதுக்கா... மாமா அழுவாருக்கா...!
சென்னை: இயல்பு மற்றும் நடிப்பு. இது இரண்டுதான். இதில் இயல்பு என்பது இயற்கையாக நாம் பேசுவது, நடப்பது போன்றவை. அதை அப்படியே ரீக்ரியேட் செய்வதுதான் நடிப்பு.
இயல்புக்கும், நடிப்புக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு. இயல்பாக நடித்தார் என்று யாராவது சொன்னால் அவரு ஒரு பெரிய்யய டுபாக்கூர் என்றுதான் அர்த்தம். காரணம், இயல்பை யாரும் நடித்துக் காட்ட முடியாது. நடிப்பு என்றாலே மிகை என்றுதான் பொருள்.
சினிமாவில் அழும் ஒருவர், நிஜத்தில் அழும்போது நிச்சயம் வேறுபாடு இருக்கும். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இந்தப் பஞ்சாயத்து ரொம்ப நாட்களாகவே இருக்கிறது. அவர் ஓவர் ஆக்ட் செய்கிறார், ஓவராக அழுகிறார், அடடா ரொம்ப ஓவரா பேசுராறுப்பா என்று பல நடிகர்களையும் பார்த்து கமெண்ட் அடித்துள்ளோம்.
அந்த வகையில் ஓவர் ஆக்ட் நடிகர்களாக மக்களிடையே அறியப்பட்டவர்களை இங்கு பார்ப்போம்....

அந்தக் காலத்தில் எத்தனை பேர் தெரியுமா...?
அந்தக் கால சினிமாவில் பெரும்பாலானோரும் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்தான். எனவே அவர்களின் நடிப்பில் நிச்சயம் நாடகத்தனம் இருந்தது. அது பார்ப்பதற்கும் செயற்கையாகவே இருந்தது.

இட்ஸ் எ பன்டாஸ்ட்டிக் சீன் மை சன்...!
மேஜர் சுந்தரராஜன் நடிப்பு கூட பல நேரங்களில் ஓவர் ஆக்ட் போலவே தெரியும் என்பார்கள். பேசும்போது அவர் லைட்டாக இழுத்து விட்டுப் பேசுவார். கடைசியில் அது ஓவர் ஆக்ட் என்பது மாறி ஸ்டைல் ஸ்டேட்மென்ட் ஆகி விட்டது. மேஜர் சுந்தரராஜன் பேசும்போது ஆங்கிலத்தையும் ஆங்காங்கே தூவி விடுவார். அது கடைசியில் மிமிக்ரி கலைஞர்களுக்கான ஒரு குரலாக மாறிப் போய் இப்போது தெருவுக்கு 2 மேஜர் சுப்பையாக்களையும், சுந்தரமூர்த்திகளையும் பார்க்க முடிகிறது.

சுருளி ராஜன்
இவரது நடிப்பும் கூட சற்று ஓவர்ஆக்ட் ரகமானதுதான். காரணம், நிஜத்தில் எந்த மனிதருமே சுருளி ராஜன் மாதிரி பேசுவதைப் பார்க்க முடியாது. ஒரு வேளை அப்படிப் பேசினாலும், அது சுருளி ராஜனைப் பார்த்த பாதிப்பாகவே இருக்க முடியும். அந்த ஒரு காரணத்திற்காகவே சுருளி ராஜனுடையது ஓவர் ஆக்ட் நடிப்பு என்று கூறி விட முடியும். இருப்பினும் தமிழகத்தைக் கவர்ந்த செல்லக் குரல்களில் சுருளியின் குரலும் ஒன்று என்பது முக்கியமானது.

ஏண்டா என்னை அடிச்சே...
வி.எஸ்.ராகவன் பற்றிப் பேசாமல் மிகை நடிப்புக்காரர்கள் பட்டியலை முடிக்க முடியாது. இவரும் கூட ஓவர் கிளாஸ் ரகம்தான். அதேசமயம், இவரது பேச்சும் கூட ஒரு ஸ்டைலாக மாறிப் போனது.

சைடு வாங்கி ஓடும் ஜெய்சங்கர்
ஜெய்சங்கரையும் ஓவர் ஆக்ட் லிஸ்ட்டில் மறக்க முடியாது. அவரது நடிப்பும் கூட ஓவராகவும், ஓஹோவெனவும் இருக்கும். அதிலும் சிஐடி வேடத்தில் அவர் நடித்த படங்களில் அவர் வில்லன்களை துரத்திக் கொண்டு சைடுவாக்கிலேயே ஓடியதைப் பார்த்து அந்தக் காலத்து ரசிகர்கள் ரொம்பவே ரசித்தனர்.

வெத்தல போட்ட ஷோக்குல...
நவரச நடிகர் என்று பெயர் வாங்கிய கார்த்திக்கும் கூட சில படங்களில் செயற்கையான நடிப்பைக் கொடுத்தவர்தான். அதிலும் வாயில் வெற்றிலை போட்டு குதப்பினால் எப்படிப் பேசுவார்களோ அதேபோல ஒரு உச்சரிப்பு.. இவரும் கூட மிமிக்ரி கலைஞர்களுக்கு பிழைப்புக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த குரலுக்கு்ச சொந்தக்காரர்தான்.

சத்யராஜ்
சத்யராஜும் தன் பங்குக்கு நிறையப் படங்களில் ஓவர் ஆக்ட் காட்டி டென்ஷனாக்கியவர்தான். அதிலும் இவர் அழுது கொண்டே பேசுவது போன்ற காட்சிகளைப் பார்த்தால் நமக்குத்தான் உண்மையிலேயே அழுகை வரும்.

'அக்கா' சண்முகசுந்தரம்!
கடைசியாக சண்முகசுந்தரத்தை சொல்லாமல் இந்த லிஸ்ட்டை முடிவுக்குக் கொண்டு வர முடியாது. கரகாட்டக்காரன் ஒரு படம் போதும். இவரது நடிப்புக்கு. அதற்கு முன்பு நிறையப் படங்களில் தலை காட்டியிருந்தாலும் கூட கரகாட்டக்காரனில் இவர் பேசிய வசனங்கள் அத்தனை பேருக்குமே கிட்டத்தட்ட மனப்பாடமாகிப் போய் விட்டது. அது இயற்கையா, செயற்கையா என்றே தெரியாமல் அப்படி ஒரு நடுவாந்திரமான ஸ்டைல்.
இப்படி நிறையப் பேரை சொல்லிட்டு போய்ட்டே இருக்கலாம். இருந்தாலும் இவர்களின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது என்பதுதான் சுவாரஸ்யமான ஆச்சரியம்.


Click it and Unblock the Notifications