உதவி இயக்குனர்களின் பட்ஜெட் நாயகி .. பிஸியாக துடிக்கும் லிசி ஆண்டனி!
சென்னை : உதவி இயக்குனர்களின் படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார் லிசி ஆண்டனி. இதற்கு இவர் சொற்பமான பணமே வாங்குகிறார்.
நாம் அனைவரும் பரியேறும் பெருமாள் படம் பார்த்து இருக்கிறோம் அதில் வரும் பரியேறும் பெருமாள் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான தேவதைகள் என அவர் வளர்த்த நாய் அவருடைய பெண் தோழி மற்றும் அவருடைய கல்லூரி ஆசிரியரை குறிப்பிட்டு கூறுவார்.

அவ்வாறு தற்பொழுது மிகவும் சிரமப்பட்டு தங்கள் பணியில் பெரும் ஆளாக வரவேண்டும் என்ற எண்ணத்தோடு கோடம்பாக்கத்தில் சுற்றித்திரியும் பல உதவி இயக்குனர்கள் இருக்கின்றனர். அவர்கள் தாங்கள் அனுகும் தயாரிப்பாளர்களிடம் காண்பதற்காக தங்களுக்காக ஒரு ப்ரொபைல் உருவாக்கி கொள்ளவும் மற்றும் சிலர் குறும்பட போட்டிகளுக்கு அனுப்பவும் மிகுந்த சிரமத்திற்கு இடையே குறும்படங்கள் இயக்கி வருகின்றனர்.
அவ்வாறு குறும்படங்கள் மற்றும் பாடல்களை இயக்கும் இயக்குநர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் நடிகை லிசி ஆண்டனி இருந்து வருகிறார். இயக்குனர் ராமின் தரமணி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பல சிறந்த திரைப்படங்களில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களிலும் மிகவும் அழகான பாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறார்.
சென்னையின் பழம்பெரும் மற்றும் முக்கியமான பகுதியான வண்ணாரப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவர். லிசி பல ஆண்டுகள் வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு தாயகம் வந்து செட்டிலானார். அவருக்கு நடிப்பின் மீது இருந்த பெரும் ஈர்ப்பின் காரணமாக அவர் நடிகையாக முயற்சி செய்து இப்பொழுது நல்ல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அவர் நடித்ததிலேயே மிகவும் பேசப்பட்ட கதாபாத்திரங்களாக தங்க மீன்கள் படத்தில் வரும் பள்ளி ஆசிரியை பாத்திரமும் பரியேறும் பெருமாள் படத்தில் வரும் கல்லூரி ஆசிரியை பாத்திரமும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவையாகும்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த அம்மா என்ற ஒரு மியூசிக் வீடியோ வெளியாகி உள்ளது. அன்னையர் தினத்திற்காக அந்த பாடல் பதிவு செய்யப்பட்டு மியூசிக் வீடியோவாக வெளியிடப்பட்டிருந்தது. இவர் பெரிய இயக்குனர்களின் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தற்பொழுது திரைப்படம் தொடர்பான படிப்புகளை படித்து வரும் உதவி இயக்குனர்களின் படங்களிலும், கல்லூரி ப்ராஜெக்ட்களிலும் நடிப்பதிலும் சிறிதும் ஆர்வம் குறையாமல் நடித்துக் கொடுக்கிறார். இதில் முக்கியமான விஷயம் அவர் இதற்கு மிகவும் சொற்பமான பணமே வாங்குகிறார் சில சமயம் இலவசமாக நடித்துக் கொடுக்கிறார் என்பது தான் பெருமைப்பட வேண்டிய விஷயம்..

அதைப்பற்றி கேட்டபோது எனக்கு நடிப்பது மிகவும் பிடிக்கும் நான் வெறும் பணத்திற்காக மட்டுமே நடிப்பது கிடையாது. அதுமட்டுமின்றி எனக்கு சொல்லக்கூடிய கதைகளிலும் கூட நல்ல கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒத்துக்கொள்வேன்.
மேலும் இந்த உதவி இயக்குனர்களுக்கு நான் நடித்து தரும்போது அது அவர்களுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும் வாய்ப்பு இருக்கிறது எனவே தான் நான் அதை செய்து வருகிறேன் என்றும் கூறினார். லட்சம் மட்டும் தான் முக்கியம் என்று நினைக்கும் பல நடிகைகளுக்கு மத்தியில், தனது லட்சியத்திற்காக நடிக்கும் சில நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











