தமிழ்நாட்டில் எடுபடாத பாஜக; கேம் ஆஃப் த்ரோன்ஸ் வசனத்தைக் கொண்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் இந்தியாவை மட்டும் இல்லாமல் சர்வதேச நாடுகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு முறை பிரதமராக வலம் வந்த பிரதமர் மோடி இம்முறையும் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைப்பார் என கருத்துக் கணிப்புகள் கூறின. குறிப்பாக பாஜக தலைமையிலான கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் எனவும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உருவாக்கிய I.N.D.I.A கூட்டணி 100 இடங்களை மொத்தமாக எட்டுவதே மிகவும் சிரமம் என கூறப்பட்டது.
தமிழ்நாட்டில் எடுபடாத பாஜக
அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நிலையான வாக்கு வங்கி இல்லாத பாஜக இம்முறை குறைந்தது 5 இடங்களையாவது உறுதி செய்யும் என கூறப்பட்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் முற்றிலும் கருத்துக்கணிப்புகளுக்கு எதிராக அமைந்தது. இந்திய அளவில் பாஜக தனித்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பினை இழந்துள்ளது. பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அதன் கூட்டணிக் கட்சிகளை நம்பி இருக்கவேண்டிய சூழலில் உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் I.N.D.I.A கூட்டணியில் இடம் பெற்றிருந்த திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரும் (புதுவை உட்பட) வெற்றி பெற்றனர். இது மட்டும் இல்லாமல், பாஜக மாநிலத்தலைவர் பேட்டி ஒன்றில், இம்முறை பாஜகவுக்கு தமிழ்நாட்டில் 25 சதவீதம் வாக்கு கிடைக்கும் என கூறியதையும் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கியுள்ளது.

மோடிக்கு நோ சொல்லும் தமிழ்நாடு
கடந்த 10 ஆண்டுகளாகவே மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் மோடிக்கு எப்போதும் கோ பேக் மோடி எனக் கூறும் தமிழ்நாடு இம்முறை வாக்குப்பதிவிலும் கூறியுள்ளது. கடந்த 2014, 2019 ஆகிய மக்களவைப் பொதுத் தேர்தல்களிலும் கூட பாஜகவுக்கான ஆதரவு தமிழ்நாட்டில் சொற்பமாகத்தான் இருந்தது. இம்முறை பாஜகவோ, பாஜக கூட்டணி வேட்பாளர்களோ ஒரு இடத்தில் கூட வெற்றியை எட்டாதது, பாஜக மேலிடத்திற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இதனை நெட்டிசன்கள் வேறுவிதமாக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பாஜக எதிர்ப்பு மனநிலை கொண்ட நெட்டிசன்கள், உலகப் புகழ் பெற்ற வெப் சீரீஸான கேம் ஆஃப் தி த்ரோன்ஸில் வரும் முக்கியமான வசனமான, " The South Will Remain An Independent Kingdom" என்ற டெம்ளேட்டை " The TN Will Remain An Independent Kingdom" என மாற்றி இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அதேபோல், வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான யூடியூபர் துருவ் ரத்தே தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் ஷாரூக்கானை பாராட்டி ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஜவான் படத்தைக் குறிப்பிட்டு, " பாஜகவின் இந்த சரிவுக்கு ஜவான் படத்தின் பங்களிப்பை நாம் மறந்து விடக்கூடாது. ஷாரூக்கான் மற்றும் ஜவான் படக்குழுவிற்கு நன்றிகள். ஜவான் படத்தின் மூலம் அரசாங்கம் மற்றும் மின்னணு வாக்கு இயந்திரங்களின் உண்மை முகத்தை வெளிக்காட்டிய திரைப்படம். இந்த திரைப்படம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அரசாங்கத்திற்கு அடிபணிந்து செல்லாமல், அரசாங்கத்தில் நடைபெறும் குளறுபடிகளை வெளிக்காட்டும் திரைப்படத்தைக் கொண்டு வந்து பலரின் மனதை திறந்த ஷாரூக்கானுக்கு பாராட்டுகள்" என குறிப்பிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











