Singapore Saloon: அதுக்கெல்லாம் லோகேஷ் செட்டாக மாட்டார்.. ஆர்ஜே பாலாஜியின் வெளிப்படையான பேச்சு!
சென்னை: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா, அன்பிற்கினியாள் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கோகுல் சிம்புவை வைத்து கொரோனா குமார் படத்தை இயக்கப் போவதாக அறிவித்து இருந்தார். ஆனால், அந்த படம் டேக் ஆஃப் ஆகவில்லை. உடனடியாக ஆர்ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் எனும் காமெடி படத்தை கலக்கலாக உருவாக்கி உள்ளார். அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர்கள் சத்யராஜ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர். சிங்கப்பூர் சலூன் படத்தின் டிரெய்லர் சற்று முன் வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ் நடித்த காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், தொடர்ந்து சினிமாவில் லோகேஷ் கனகராஜ் நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

டிரெய்லர் வெளியீட்டு விழா: கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் படத்தின் டிரெய்லர் இன்று டிரெய்லர் வெளியீட்டு விழாவுடன் வெளியானது. ஐசரி கணேஷ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூர் சலூனில் லோகேஷ் கனகராஜ்: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கி குமுதா ஹேப்பி அண்ணாச்சி என காமெடியில் அசத்திய கோகுல் விஜய்சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட நடிகர்களை இயக்கி வந்த நிலையில், தற்போது ஆர்ஜே பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கி உள்ளார். அந்த படத்தில் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
கவுதம் மேனன், மிஷ்கின் வரிசையில்: தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் சமீப காலமாக சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டனர். கவுதம் மேனன் இயக்கிய படங்களை விட அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது. அவரை தொடர்ந்து மிஷ்கின் உள்ளிட்ட மற்ற இயக்குநர்களும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துள்ளனர். லியோ படத்தில் பல இயக்குநர்களை நடிக்க வைத்து அழகு பார்த்த லோகேஷ் கனகராஜ் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்துள்ள நிலையில், இதே போல இனியும் நடிப்பாரா என்கிற கேள்விக்கு பேட்டி ஒன்றில் பதில் அளித்த ஆர்ஜே பாலாஜி அந்த வரிசையில் லோகேஷ் வரமாட்டார் எனக் கூறியுள்ளார்.
தூக்கிட்டீங்களான்னு கேட்டார்: லோகேஷும் நானும் நல்ல நண்பர்கள் நட்புக்காக மட்டுமே இந்த படத்தில் நடித்தார். அவருக்கு நடிக்கிற ஆர்வத்தை விட இயக்குவதில் தான் ஆர்வம் அதிகம். சில விழாக்களில் சந்தித்து பேசும் போது, தான் நடித்த காட்சிகளை தூக்கிட்டீங்களான்னே கேட்டார். ஆனால், அதெல்லாம் அப்படியே இருக்கு என்றதும் சிரித்து விட்டு சென்று விட்டார்.
சிங்கப்பூர் சலூன் டிரெய்லர்: சிறந்த சலூனை சென்னையில் வைக்க வேண்டும் என நினைத்து கடுமையாக உழைத்து சலூனை நடத்தும் ஆர்ஜே பாலாஜிக்கு மற்ற பெரிய மல்டி பிராண்ட்ஸ் சலூன் கடைகள் மூலமாக வரும் பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார் என்கிற கதையை கோகுல் படமாக்கி உள்ளார். லோகேஷ் கனகராஜை போலவே ஜீவாவும் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











