என் மீது பழி போடாதீங்க.. அப்படி இனிமேல் படம் எடுக்கமாட்டேன்.. வன்முறை, போதை பற்றி லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
சென்னை: லோகேஷ் கனகராஜ் குறைந்த எண்ணிக்கையிலான படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் ரஜினி, கமல், விஜய் ஆகிய டாப் ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி கவனம் ஈர்த்திருக்கிறார். ஆனால் ரஜினியுடன் இணைந்த கூலி படமும், விஜய்யுடன் இணைந்த லியோ படமும் மோசமான தோல்விகளை சந்தித்தன. இது ஒருபக்கம் இருக்க அவரது படங்களில் வன்முறையும், போதையும் அதிகம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு இப்போது அவர் விளக்கமளித்திருக்கிறார்.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இதுவரை கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இவர்ற்றில் கூலி, லியோ ஆகிய படங்கள் படுதோல்வியையும், மற்ற படங்கள் மெகா ஹிட்டாகவும் அமைந்தன. அதுமட்டுமின்றி எல்சியூ என்ற ஒன்றையும் உருவாக்கி ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குநராக வலம் வருகிறார். இது ஒருபக்கம் இருக்க அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
இந்திய அளவில் பிரபலம்: லோகேஷ் கனகராஜ் இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநராக மாறியிருக்கிறார். பாலிவுட் ஸ்டார் அமீர் கானை இயக்கும் நிலைமைக்கு சென்றிருக்கிறார். அவரது இயக்கத்தில் நடித்துவிட பல நடிகர்கள் ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப் கூட அந்த ஆசையால்தான் விஜய் ஹீரோவாக நடித்த லியோ படத்தில் ஒரு ரோல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் மீது குற்றச்சாட்டு: இது ஒருபக்கம் இருக்க லோகேஷ் கனகராஜின் படங்களில் அதீத வன்முறையும், போதை பொருள் பற்றிய காட்சிகளும் இருப்பதாக குற்றச்சாட்டு தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. கடந்த மாதத்தில் திருத்தணியில் வடமாநில இளைஞர் ஒருவரை சிறுவர்கள் சேர்து வெட்டியபோதும் இந்த பேச்சு பரவலாக எழுந்தது. ஆனால் அதுகுறித்து எதுவும் பேசாமல் கடந்து சென்றுகொண்டிருந்தார் லோகேஷ். இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
லோகேஷ் பேசியது: அப்போது இதுகுறித்து பேசிய அவர், "ஒரு படம் பார்ப்பதால் வன்முறை அதிகரிக்கிறது என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிறகு ஏன் ஒருவர் படிக்க வேண்டும். அப்பா, அம்மாவிடம் வளர வேண்டும். நிறைய பேரிடம் அட்வைஸ் கேட்கிறார்கள். ஆனால் எனது படங்களால் மட்டுமே வன்முறை அதிகரித்திருப்பதாக பழி போட வேண்டாம். அதை கட்டுப்படுத்துவதற்கு எல்லோருக்குமே பொறுப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.
போதை பொருள் பற்றி: அதேபோல் நான் செய்த எல்லா படங்களிலும் போதை எடுத்துக்கொண்டால் சந்தோஷமாக இருக்கலாம் என்று சொல்லவில்லை. எனக்கு என்று சமூகத்தின் மீது ஒரு அக்கறை இருக்கிறது. போதைக்கு எதிராகத்தான் எனது எல்லா படங்களிலும் பேசியிருக்கிறேன். எனக்கு கிடைத்த கதாநாயகர்கள் மூலம் உரக்க சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். போதைக்கு எதிராக பல பிரசாரங்களை செய்துகொண்டிருக்கிறேன். 15,000 மாணவர்களிடம் போதை பொருள் எடுத்துக்கொள்ள மாட்டேன் என உறுதி எடுக்க வைத்திருக்கிறேன்.
அவர்கள்தான் உதவி இயக்குநர்கள்: கோவையில் இருக்கும் 60 கல்லூரிகளில் போதைக்கு எதிராக குறும்படங்களை மாணவர்களை எடுக்க வைத்து அதில் யார் முதல் இடத்தில் வருகிறார்களோ அவர்களை எனது உதவி இயக்குநராக சேர்த்திருக்கிறேன். பெரிய ஹீரோக்களை வைத்து Say no to drugs என்றுதான் சொல்கிறேன். நான் என்ன சொன்னாலும் நல்லதை கேட்க மாட்டேன் என்றால் நான் என்ன செய்வது. நான் இனிமேல் அப்படி படங்கள் எடுக்காமல் விடுகிறேன். அப்படி நான் விடுவதால் சமூகம் மாறும் என்றால் அப்படி எடுப்பதை விட்டுவிடுகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











