லோகேஷ் கனகராஜ் கதையே எழுதமாட்டார்.. ஓஹோ வரிசையான தோல்விக்கு அதுதான் காரணமா?.. நண்பர் முடிச்சுவிட்டார்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான கூலி படம் பயங்கரமாக அடிவாங்கிவிட்டது. அடுத்ததாக அவர் யாரை இயக்குவார் என்று கேள்வி எழுந்த சூழலில்; அவரோ அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி படத்தில் ஹீரோவாக கமிட்டாகிவிட்டார். சூழல் இப்படி இருக்க இயக்குநரும், லோகேஷின் நெருங்கிய நண்பருமான ரத்னகுமார் 29 என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதன் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
கோலிவுட்டின் டாப் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜுக்கு கடந்த சில வருடங்களாகவே நேரம் சரியில்லை போல. விஜய்யை வைத்து இயக்கிய லியோ, ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய கூலி என இரண்டு படங்களுமே ஓவர் ஹைப்போடு வெளியாகி தடம் தெரியாமல் போயின. படத்தின் மேக்கிங், கதை என எதிலுமே நேர்த்தி இல்லாமல் லோகி தனது இஷ்டத்துக்கு படத்தை எடுத்து வைத்திருக்கிறார் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
ஆட்டம் கண்ட மார்க்கெட்?: முக்கியமாக தமிழ் சினிமாவில் லோகேஷ் இப்போது டாப் 3 இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். ஆனால் லியோ மற்றும் கூலி ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு அவருக்கான இடம் கொஞ்சம் ஆட்டம் கண்டிருப்பதாகவும்; அவரை நம்பி கோடி கணக்கில் பணம் கொட்ட அனைத்து தயாரிப்பாளர்களுமே கொஞ்சம் யோசிக்கிறார்கள் என்றும் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சோஷியல் மீடியாவிலும் லோகேஷை ட்ரோல் செய்துவருகிறார்கள்.

ஹீரோவாக அறிமுகம்: இரண்டு படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததை அடுத்து அவர் யாரை இயக்கப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்திருந்தன. ஆனால் அவரோ எல்லோருக்கும் ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக இயக்கத்துக்கு பதிலாக நடிப்பு பக்கம் சென்றிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கிவரும் டிசி படத்தில்தான் லோகேஷ் ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார். சமீபத்தில்தான் படத்தின் டீசர் வெளியாகி சுமாரான கவனத்தை ஈர்த்தது.
ரத்னகுமாரின் 29: இதற்கிடையே ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார். அதில் பென்ஸ் உள்ளிட்ட படங்களின் வேலைகள் நடந்துவருகின்றன. இது ஒருபக்கம் இருக்க லோகேஷ் கனகராஜுக்கு நெருங்கிய நண்பரும், அவரது படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியவரும், இயக்குநருமான ரத்னகுமார் 29 என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இதில் விது, ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
ரத்னகுமார் பேச்சு: இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் பேசிய ரத்னகுமார், "முதலில் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாடுக்கு ஒரு படம் செய்வதாக இருந்தது. ஆனால் அதில் கொஞ்சம் மாற்றங்கள் நடந்துகொண்டே இருந்தது எனக்கு விருப்பமில்லை. அப்போதுதான் கார்த்திக் சுப்புராஜ் அழைத்து எங்கள் ஸ்டோன் பெஞ்ச்சுக்கு ஒரு படம் செய்யுங்கள் என்று சொன்னார். லோகேஷுக்கு இப்படத்தின் கதை என்ன பெயர் என்னவென்றுகூட தெரியாது. அவர் இப்போது டிசி படத்தின் ஷூட்டிங்கிற்காக குற்றாலத்தில் இருக்கிறார். தூரத்தில் இருந்து ஒரு லெட்டர் எழுதியாவது வாழ்த்தியிருக்கலாம். அவர் ஸ்க்ரிப்ட்டே எழுதமாட்டார். எங்கிருந்து லெட்டர் எழுதுவார்" என்றார்.
ஆக லோகேஷ் இயக்கும் எந்தப் படத்துக்கும் அவர் கதை எழுதமாட்டார் என்பது ரத்னகுமார் பேசியதை வைத்து உறுதியாகியிருப்பதாக கிண்டல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். அதுமட்டுமின்றி சமீபகாலமாக லோகேஷ் கனகராஜின் படங்கள் தோல்வியடைவதற்கு அவர் கதையே எழுதாததுதான் காரணமோ என்றும் சந்தேகம் கிளப்பிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











