Lokesh Kanagaraj: “10 படம் தான்னு சொன்னா போதாது... எழுதி கொடுங்க..” லோகேஷுக்கு செக் வைத்த ரசிகர்கள்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ 19ம் தேதி வெளியானது.
லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
இதனிடையே லோகேஷ் கனகராஜ் கொடுத்த பில்டப் அளவிற்கு லியோவில் எதுவும் இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதனால் கடுப்பான ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ்ஜிடம் "10 படங்கள் மட்டுமே இயக்குவேன்" என எழுதித் தரக் கேட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
லோகேஷுக்கு செக் வைத்த ரசிகர்கள்
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் லியோ. லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் பான் இந்தியா படமாக வெளியான லியோ, முதல் நாளில், மட்டுமே 148 கோடி ரூபாய் வசூலித்தது. முதல் நாளில் மிகப் பெரிய ஓபனிங் கிடைத்த படம் என்ற பெருமையை லியோ தட்டிச் சென்றது. அதேநேரம், லியோ படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.
வழக்கம் போல மேக்கிங்கில் கவனம் செலுத்திய லோகேஷ் கனகராஜ், கதை, திரைக்கதையில் சொதப்பிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல், லியோ LCU-ன் கீழ் வந்திருந்தாலும், அதில் பெரிதாக சுவாரஸ்யமான சம்பவங்கள் இல்லையென்றும் தங்களது ஏமாற்றத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். அதனால் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் லியோ, விமர்சன ரீதியாக பலமாக அடி வாங்கியுள்ளது.
லியோவை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் வராது என லோகேஷ் ஏற்கனவே கூறிவிட்டார். அதேபோல், மொத்தமே 10 படங்கள் தான் இயக்குவேன் எனவும் உறுதியாக கூறிவிட்டார். இதில், கைதி 2, விக்ரம் 2 படங்கள் LCU-ன் கீழ் வரும் எனவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே லியோ படத்துக்கு விமர்சனம் செய்திருந்த ப்ளூ சட்டை மாறன், லோகேஷ் கனகராஜ் 10 படங்கள் தான் இயக்குவேன் என சொன்னதை சுட்டிக் காட்டியிருந்தார். மேலும், 5வது படமான லியோவிலேயே லோகேஷிடம் சரக்கு காலியாகிவிட்டது என்பதை பார்க்க முடிகிறது. இவரால் 10 படங்கள் கூட ஒழுங்காக கொடுக்க முடியாது என்பதாக விமர்சித்திருந்தார். இப்போது அதனை இன்னும் ஒருபடி மேலே சென்று மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார்.

அந்த மீம்ஸில், பத்து படங்கள் மட்டும் இயக்கிவிட்டு ரிட்டையர்டு ஆகிவிடுவேன் என லோகேஷ் கனகராஜ் சொல்வதாக கேப்ஷன் உள்ளது. அதற்கு ரசிகர்களோ "சொன்னா மட்டும் போதாது... எழுதி கொடுங்க.." என கேட்பதாக ரியாக்ட் செய்துள்ளனர். அதாவது பத்து படங்கள் மட்டும் தான் இயக்குவேன் என்பதை சொல்வதோடு நிறுத்தாமல் எழுதிக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் லோகேஷுக்கு செக் வைப்பதாக இந்த மீம்ஸ்ஸை கிரியேட் செய்துள்ளனர். இதனை ப்ளூ சட்டை மாறன் தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











