Rajini: ரஜினிக்கு முதலில் சொன்ன கதையில் அவர் வில்லன்.. ஹீரோ யார் தெரியுமா? லோகேஷ் கனகராஜ் ஓபன்!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கூலி. இந்த படம் அவரது 171வது படம். தமிழ் சினிமாவிற்குள் ரஜினிகாந்த் காலடி எடுத்துவைத்து 50வது ஆண்டில் கூலி படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் புரோமோஷன் வேலைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அண்மையில் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
கூலி படத்தில் ரஜினியுடன் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். குறிப்பாக சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஜூனியர் எம்.ஜி.ஆர், ஸ்ருதி ஹாசன், பூஜா ஹெக்டே, அமீர்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் பான் இந்தியா அளவில் கவனம் பெறுவது மட்டும் இல்லாமல், ஹிட் அடிக்கவும் இப்படியான நட்சத்திரங்களை நடிக்க வைத்துள்ளது தயாரிப்பு தரப்பு.

ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டுவிட்டது. மூன்று பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தாலும், பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா பாடலுக்கு உலகம் முழுவதும் செம மவுசு எகிறியது எனலாம். படத்தின் புரோமோசன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கலாட்டா பிளஸ் யூடியூப் சேனலுக்கு லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில், பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ரஜினிதான் வில்லனே: அதாவது, " நான் முதலில் ரஜினி சாருக்கு சொன்ன கதை கூலி படத்தின் கதையல்ல. நான் முதலில் சொன்ன கதை ரஜினி சாருக்கு மிகவும் பிடித்துப் போனது. அந்த படத்தில் ரஜினி சார் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது. அவரும் நடிக்கிறேன் எனக் கூறிவிட்டார். ரஜினிகாந்த் சார் வில்லன் என்றால், அவருக்கு ஏற்ற கதாநாயகனைப் போட வேண்டும் என்று நாங்கள் யோசித்து வந்தோம். இது மட்டும் இல்லாமல், அந்த படத்தை ஒரு ஃபேண்டசி படமாக எடுக்கலாம் எனவும் யோசித்தேன்.

கூலி: ஆனால் ஒரு கட்டத்தில் நான் எடுத்த முடிவு, இது ரஜினி சாரின் பிரைம் டைம். இந்த நேரத்தை நாம் இந்த படத்திற்காக செலவு செய்யக்கூடாது என்பதால், இந்த படத்தை எடுக்க வேண்டாம் என முடிவு செய்தேன். ஒருநாள் காலையில் ரஜினி சாருக்கு போன் செய்து, சார் இந்த படம் இப்போது வேண்டாம். என்னிடத்தில் வேறு கதை உள்ளது. அந்த கதை உங்களுக்கு பிடித்தால் சொல்லுங்கள், அந்த படத்தை பண்ணலாம் எனக் கூறினேன். அவரும் வரச்சொன்னார், கூலி படத்தின் கதை அவருக்கு பிடித்திருந்தது.
ரசிகர்கள் ஆவல்: நான் ரஜினி சாருக்கு கதை சொல்லிவிட்டு, படத்தின் ப்ரீ புரெடக்ஷனில் எல்லா வேலைகளையும் முடித்து, படப்பிடிப்பைத் தொடங்கவே ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது" என அந்த பேட்டியில் கூறியுள்ளார். ரஜினியை வைத்து அதுவும் வில்லனாக ஒரு படமா? மாஸாக இருந்திருக்குமே என அவரது ரசிகர்களே இணையத்தில் பேசத் தொடங்கி விட்டார்கள். ஆனால் கதாநாயகனாக யாரை போடுவார்கள்? ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்துள்ளார், இது மட்டும் இல்லாமல், லோகேஷ் கனரகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக கூட அந்த படத்தை எடுத்திருக்கலாமே என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











