கூலியின் வசூல் இதுதான்.. அதிகாரப்பூர்வமாக சொன்ன லோகேஷ் கனகராஜ்.. யானை படுத்தாலும் குதிரை மட்டம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடைசியாக வெளியான படம் கூலி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது படத்திற்கு அனிருத் இசையமைத்தார். படம் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் தோல்வி படமாக மாறியது. இப்படி இருக்கும்போது இந்த படத்தின் வசூல் எவ்வளவு என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. படக்குழுவும் படத்தின் வசூல் குறித்து எந்த தகவலும் வெளியிடாததால் இது தொடர்பான கேள்வி பலருக்கும் இருந்தது. இந்த கேள்விகளுக்கு லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50வது ஆண்டு திரைப்பட விழாவில் வெளியான படம் கூலி. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக தமிழ் சினிமாவில் ரூபாய் 1000 கோடிகள் வசூலிக்கும் முதல் படமாக இந்த படம் இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் படத்தின் திரைக்கதையில் இருந்த ஏகப்பட்ட பிரச்னை படத்தை விமர்சன ரீதியான தோல்விப் படமாக மாறியது.

லோகேஷ் கனகராஜ்: இதனால் படத்தின் மொத்த வசூல் குறித்து படக்குழு எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. படம் முதல் நாளில், ரூபாய் 151 கோடிகள் உலக அளவில் வசூலித்தது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த படம் என்ற சாதனையைப் படைத்தது. அதன் பின்னர் படத்தின் வசூல் குறித்து எந்த தகவலும் வரவில்லை. இப்படி இருக்கும்போது, இன்று அதாவது டிசம்பர் 26ஆம் தேதி மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
வசூல்: அப்போது கூலி படத்தின் வசூல் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, கூலி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. மீம் கிரியேட்டர்களுக்கு நன்றி. படத்திற்கு வந்த விமர்சனங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். அடுத்த படங்களில் அதில் கவனம் செலுத்துகிறேன். தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு படத்தின் வசூல் குறித்து கேட்டேன். ரூபாய் 500 கோடிகள் வசூலித்ததாக தெரிவித்தார்" என்று கூறினார்.
யானை படுத்தாலும் குதிரை மட்டம்: இவரது இந்த பதில்தான் தற்போது கூலி படத்தின் அதிகாரப்பூர்வமான வசூல் குறித்த தகவலாக உள்ளது. இதைக் கேள்விப்பட்ட பலரும், கூலி படம் விமர்சன ரீதியாக தோல்விப் படமாக மாறி இருந்தாலும், வசூலில் ரூபாய் 500 கோடிகள் வசூலித்திருப்பது என்பது, யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற பழமொழிக்கு பொருத்தமானதாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











