கைதி நடிகரின் அடுத்த படம்.. லோகேஷ் கனகராஜ் பண்ண லைஃப் டைம் செட்டில்மெண்ட்.. கொட்டுக்காளி ஹீரோயின்!
சென்னை: தமிழ் சினிமாவில் புதிய கதைக்களங்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், "கான் சிட்டி" என்ற முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்த வெளியீடு சினிமா ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாளத்தின் பிரபல நடிகை அன்னா பென், மற்றும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மூத்த நடிகை வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி வருகிறார்.

'கான் சிட்டி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் புன்னகைக்க வைக்கும் அதே நேரத்தில், ஒரு நடுத்தர குடும்பத்தின் உணர்வுபூர்வமான பக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. நகரப் பின்னணியில், அர்ஜூன் தாஸ் கையில் அலுவலகப் பையுடன் நிற்க, அவரைச் சுற்றி அன்னா பென் கைபையையும், யோகிபாபு மற்றும் வடிவுக்கரசி பயணப்பைகளையும் வைத்துள்ளனர். சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் குழந்தை அகிலன் கையில் ஒரு வெற்றிக் கோப்பையுடன் இருக்க, இந்த முற்றிலும் வித்தியாசமான போஸ்டர் படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தைத் தூண்டுகிறது.
'கான் சிட்டி' என்ற தலைப்பு, இது ஒரு முழுமையான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் என்பதை தெளிவுபடுத்துகிறது. போஸ்டரின் வடிவமைப்பு மற்றும் நட்சத்திரங்களின் முகபாவனைகள், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் நிறைந்த ஒரு திரை அனுபவத்தை முன்னிறுத்துவதாக அமைந்துள்ளன. இதனால் படக்குழுவினர் மத்தியில் மட்டுமல்லாது, ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மங்களூர், சென்னை, மற்றும் மும்பை ஆகிய முக்கிய நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவான படம், வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் தொடர்ந்து வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வரும் ஷான் ரோல்டன், இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. "கான் சிட்டி" திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கைதி படத்தில் வில்லனாக நடித்து கலக்கிய அர்ஜுன் தாஸ் தொடர்ந்து ஹீரோவாக சமீப காலமாக நடித்து அசத்தி வரும் நிலையில், அவரது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளது ரசிகர்களையும் படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











