'மலரும் நினைவுகள் அல்ல' 61 வருட கமலிஷம்.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சத்யா பாடல்.. கமல் நெகிழ்ச்சி!
சென்னை: கமல்ஹாசன் சினிமாவுக்கு வந்து 61 வருடம் ஆவதை ஒட்டி, அவரை கவுரவப்படுத்தும் விதமாக சத்யா பட பாடலை மறு ஆக்கம் செய்துள்ளனர்.
பீம்சிங் இயக்கிய 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன்.
இந்தப் படம், 1959-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியானது. ஜெமினி கணேசன், சாவித்ரி நடித்த இந்த படம் மூலம்தான் கமல்ஹாசன், திரையுலகில் அறிமுகமானார்.

61 ஆண்டுகள்
இதையடுத்து கமல்ஹாசன் திரையுலகிற்கு அறிமுகமாகி நாளையுடன் (ஆகஸ்ட் 12) 61 ஆண்டுகள் ஆகிறது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அதைக் கொண்டாடும் விதமாக கமல்ஹாசன் நடித்த சத்யா படத்தின் ஒரு பாடலை மறு ஆக்கம் செய்து வெளியிட்டுள்ளனர். அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள போட்டா படியுது படியுது பாடலை, ரீமேக் செய்துள்ளார், சிம்பா படத்தின் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர்.

இளையராஜா இசை
சத்யா படம் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியானது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். படத்தோடு இதன் பாடல்களும் ஹிட்டானது. இந்நிலையில், தற்போது சிம்பா பட இயக்குநர், போட்டா படியுது படியுது பாடலை கமலின் அதே கெட்டப்பில், 80 களில் இருப்பது போல் மறு ஆக்கம் செய்து அசத்தி இருக்கிறார்.

இயக்குனர் அரவிந்த் ஶ்ரீதர்
கமல் நடித்த அந்தப் பாடலில் குரு சமரன், சசிகுமார், ஜெகன் உள்ளிட்ட புதிய நடிகர்களை நடிக்க வைத்துள்ளனர். 'சத்யா' படத்தில் இருப்பதைப் போன்றே, அந்தப் பாடல் காட்சியை உருவாக்கி இருக்கிறார், இயக்குனர் அரவிந்த் ஶ்ரீதர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு பல நெட்டிசன்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அப்படியே இருப்பதாக சிலர் கூறியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ்
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், '61 வருட கமலிஷத்துக்காக கமல்ஹாசன் சாரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன். ரிபெல் ஆன்தம் பாடலாக, 'சிம்பா' இயக்குனர் அரவிந்த் ஶ்ரீதர் இயக்கியுள்ள 'சத்யா' படத்தின் 'போட்டா படியுது படியுது' பாடலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
உந்துதல் நீங்கள்தான்
இதையடுத்து இந்த வீடியோவுக்கு நடிகர் கமல்ஹாசனும் நன்றி தெரிவித்துள்ளார். அதில்,' இது வெறும் மலரும் நினைவுகள் அல்ல. மாறா அன்பு. இதற்குப் பதில் பரிசு என் மாறா அன்பு மட்டுமாகவே இருக்க முடியும். என் நீண்ட பயணத்தில் அயர்வின்றி நடத்தும் சக்தியும் அதுதான். என்னை இந்த மாரத்தான் ஓட்டத்தில் நீங்கள்தான் ஓட அனுமதித்தீர்கள். என் உந்துதல் நீங்கள்தான்' என்று நெகிழ்வுடன் லோகேஷ் கனகராஜின் பதிவை பாராட்டி பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











