என்னை வீணடித்துவிட்டதாக சஞ்சய் தத் சொன்ன கருத்து.. லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில் இதுதான்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இப்போது கூலி திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அடுத்ததாக கைதி 2, இரும்புக்கை மாயாவி உள்ளிட்ட படங்களை இயக்கவிருக்கிறார். ரஜினியை வைத்து அவர் இயக்கியிருக்கும் கூலி படத்தை பார்ப்பதற்கு பலரும் ஆவலோடு இருக்கிறார்கள். ஆகஸ்ட் 14ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
இந்தியாவின் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய படங்களில் லியோ தவிர்த்து மற்ற எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து; வசூலில் மிரட்டின. அதனால் இப்போது டாப் பொசிஷனில் இருந்துவருகிறார். அவரது இயக்கத்தில் முழு படம் இல்லை சில சீன்களிலாவது நடித்துவிட வேண்டும் என்றுதான் பல வளர்ந்துவரும் நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கூலி லோகேஷ் கனகராஜ்: அவர் இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், அமீர் கான், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்திலிருந்து வெளியான இரண்டாவது சிங்கிளான மோனிகா பாடல் சுமாரான வரவேற்பைதான் பெற்றிருக்கிறது. அதற்கு முன்னதாக ரிலீஸ் செய்யப்பட்ட முதல் சிங்கிளுக்கும் இதே ரிசல்ட்தான்.

சஞ்சய் தத் வருத்தம்: இதற்கிடையே லியோ படம்தான் லோகேஷ் சறுக்கிய முதல் படம். படத்தில் ப்ளாஷ்பேக் விவகாரம் அந்த சமயத்தில் பெரிய பூதாகரமானது. அதுமட்டுமின்றி தனது ஸ்பெஷல்களில் ஒன்றான எல்சியூவை வேண்டுமென்றே லியோ படத்தில் புகுத்திவிட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய சஞ்சய் தத், "விஜய் நடித்த லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் என்னை சரியாக பயன்படுத்தவில்லை. அதனால் லோகேஷ் மீது எனக்கு கோபம் இருக்கிறது" என்று ஓபனாக பேசியிருந்தார்.
லோகேஷின் பதில்: இந்நிலையில் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் என்ற ஆங்கிலம் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய அவர், "சஞ்சய் தத் அன்று அப்படி பேசியவுடன் எனக்கு ஃபோன் செய்தார். நான் வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் பேசியதை திரித்து வெட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிட்டனர் என கூறினார். அதெல்லாம் ஒன்று பிரச்னை இல்லை என்று கூறிவிட்டேன். சஞ்சய் தத் கதாபாத்திரத்தில் நான் ஏதாவது ஒரு தவறு செய்திருக்கலாம். தவறே செய்யாமல் இருக்க நான் ஒன்றும் தலைசிறந்த இயக்குநர் இல்லை.
தவறுகள் செய்திருக்கிறேன்: நான் என்னுடைய படங்களில் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன். ஆனால் எல்லாமே எனக்கு ஒரு பாடம்தான். சஞ்சய் தத்துக்கு சிறந்த கதாபாத்திரத்தை எதிர்காலத்தில் கொடுப்பேன்" என்றார். மேலும் இந்தப் பேட்டியில் அவர், "கூலி படத்தை பார்த்துவிட்டு ரஜினி என்னை கட்டியணைத்தார். எனக்கு இன்னொரு தளபதி கொடுத்துட்டீங்க லோகேஷ் என பாராட்டினார். போஸ்ட் புரொடக்ஷன் டைமில் ரொம்பவே மிஸ் செய்கிறேன். இப்போதெல்லாம் அவரை பார்க்க வேண்டுமென்று தோன்றினால் நேராக ஜெயிலர் 2 படத்தின் செட்டுக்கு போய்விடுகிறேன்" என சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











