Lokesh Kanagaraj - லியோ கொடுத்த அடி.. தலைவர் 171ல் லோகேஷ் கனகராஜ் எடுத்திருக்கும் முடிவு இதுவா?
சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) லியோ கொடுத்த அடி காரணமாக ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் லோகேஷ் கனகராஜ் புதிய முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார். அதிலும் கமல் ஹாசனை வைத்து அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து அவரது கிராஃப்பை உச்சத்துக்கு கொண்டு சென்று நிறுத்தியது. இந்த சூழலில் விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தை வைத்து லியோ படத்தை இயக்கினார்.

சறுக்கிய லியோ: வரிசையாக 4 படங்கள் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக லியோவிலும் அதனை தொடர்வார் என்ற எதிர்பார்ப்புடன் படம் பார்க்க ரசிகர்கள் சென்றனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. முக்கியமாக படத்தின் இரண்டாம் பாதியை ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.
ஒர்க் அவுட்டாகாத எல்சியூ: அதேபோல் லோகேஷ் கனகராஜின் பலங்களில் ஒன்றாக கருதப்படுவது எல்சியூ. ஆனால் அதுவும் லியோ படத்தில் எடுபடாமல் போனது. வலுக்கட்டாயமாக லியோவை எல்சியூவில் திணித்திருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமாக படத்தின் ப்ளாஷ்பேக் காட்சி மிகப்பெரிய விவாதத்தை எழுப்பி ட்ரோல்களையும் சந்தித்தது. இதனால் லியோ படம் லோகேஷுக்கு முதல் சறுக்கலாக பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் பேட்டி: விமர்சன ரீதியாக படம் அடிவாங்கினாலும் வசூல் ரீதியாக மாஸ் காட்டியதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இந்த சூழலில் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். முதல் படமாக அந்த பேனரில் விஜயகுமார் இயக்கத்தில் ஃபைட் கிளப் படம் உருவாகி இன்று ரிலீஸாகியிருக்கிறது. எனவே அதற்கான ப்ரோமோஷனுக்காக பேட்டி அளித்துவருகிறார் லோகேஷ்.
அழுத்தம் இல்லாமல் வேலை: அதன்படி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பேசிய அவர், "லியோ படத்தில் இரண்டாவது பாதி சரியாக இல்லை என்ற விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதுபோன்ற தவறு ரஜினியை வைத்து இயக்கப்போகும் தலைவர் 171 படத்தில் நடக்கக்கூடாது என்பதற்காக எந்த அழுத்தமும் இல்லாமல் பொறுமையாக வேலை செய்ய திட்டமிட்டிருக்கிறேன்.
ரிலீஸ் தேதி இல்லை: அதுமட்டுமின்றி லியோ படத்துக்கு ஆரம்பத்திலேயே ரிலீஸ் தேதியை முடிவு செய்து அறிவித்துவிட்டோம். எனவே அந்த அழுத்தமும் இருந்தது. ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் படத்தை இயக்கினால் எந்த குறைபாடும் இருக்காது. தலைவர் 171 வேலைகளை நிதானமாகவும் விவேகத்துடனும் செய்வேன்" என்றார். லோகேஷ் கனகராஜின் இந்தப் பேட்டி மூலம் தலைவர் 171 படத்தின் ரிலீஸ் தேதி ஆரம்பத்திலேயே அறிவிக்கப்படாது என்பது உறுதியாகியிருக்கிறது. அனைத்துக்கும் லியோ கொடுத்த அடிதான் காரணம்..


Click it and Unblock the Notifications











