லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைந்த அந்த இயக்குநர்.. அல்லு அர்ஜுன் படத்தில் சம்பவம் இருக்குமா?
சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த கூலி திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவரை பலரால் கொண்டாடப்பட்ட அவர்; கடுமையாக ட்ரோலும் செய்யப்பட்டார். எப்படியாவது கூலி கொடுத்த மோசமான அனுபவத்தை அடுத்த படத்தில் சரிக்கட்டும் பொறுப்பில் இருக்கிறார். அந்தவகையில் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இதில் கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு லோகி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக வெற்றி படங்களை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். அந்தப் படங்கள் எல்லாம் லோகியை டாப் இயக்குநர்கள் வரிசையில் கொண்டு போய் நிறுத்தின. முக்கியமாக அதில் பயன்படுத்திய எல்சியூ என்ற விஷயம் கோலிவுட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தின. யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல் சினிமாவுக்குள் வந்து; இளம் வயதிலேயே டாப் இடத்துக்கு சென்றார். அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் பல நடிகர்கள் ஆசைப்பட்டார்கள்.
சறுக்கல் ஆரம்பம்: நன்றாக போய்க்கொண்டிருந்த அவரது கரியர் லியோ படத்தில் சறுக்க ஆரம்பித்தது. ஏற்கனவே விஜய்யை வைத்து மாஸ்டர் இயக்கி ஹிட் கொடுத்திருந்ததால் லியோவும் அதேபோன்ற ஒரு தரமான சம்பவத்தை செய்யும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் படத்தில் பல விஷயங்களை சொதப்பி வைத்திருந்தார். முக்கியமாக பிளாஷ்பேக் விஷயத்தில் அவரை ரசிகர்கள் கடுமையாக கிண்டல் செய்துவிட்டார்கள். அதுமட்டுமின்றி லியோவில் எல்சியூவை வேண்டுமென்றே திணித்தது போன்ற உணர்வைத்தான் கொடுத்திருந்தது.

கூலிக்கு மோசமான அடி: லியோ படத்தின் தோல்வி ஏகப்பட்ட விவாதங்களை கிளப்பின. அதேசமயம் ஒரு இயக்குநருக்கு ஒரு படம் சொதப்புவது இயல்புதான். அடுத்த படத்தில் கம்பேக் கொடுத்துவிடுவார் என்று பேசினார்கள் ரசிகர்கள். லியோவுக்கு பிறகு ரஜினியை வைத்து கூலியை இயக்கினார். பொதுவாக லோகியின் படங்களில் இயக்குநர் ரத்னகுமாரும் பணியாற்றுவார். ஆனால் கூலியில் அவர் இணையவில்லை. லோகேஷ் மட்டும் தனியாக வேலைகளை கவனித்தார். ரஜினியை வைத்து மறக்க முடியாத ஒரு படத்தை தருவார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே கிடைத்தது. படம் மோசமான தோல்வியையும், ட்ரோல்களையும் சந்தித்தது.
அடுத்த படம்: கூலி படத்தின் தோல்வி லோகேஷின் கரியரையே கொஞ்சம் அசைத்து பார்த்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பலரும் அவரை அதீதமாகவே ட்ரோல் செய்தார்கள். அவரும் கூலி செய்த சில தவறுகளை ஏற்றுக்கொண்டு அடுத்த படத்தில் சரி செய்ய தயாராகிவிட்டார். அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரமாண்ட பட்ஜெட்டில் படத்தை தயாரிக்கிறது.
மீண்டும் இணைந்த ரத்னகுமார்: இந்தப் படத்தில் கண்டிப்பாக கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முழு மூச்சில் உழைக்கவிருக்கிறார் லோகி. எனவே கூலிக்கு முந்தைய படங்கள்வரை தனக்கு பக்கபலமாக இருந்த ரத்னகுமாரை மீண்டும் தன்னுடன் இணைத்திருக்கிறார். ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ், சந்துரு அன்பழகன் ஆகியோர் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரத்னகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து புதிய தொடக்கம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுவரை ரத்னகுமாரும், லோகேஷும் சேர்ந்து வேலை செய்த படங்களில் லியோவை தவிர்த்து மற்ற படங்கள் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றவை. எனவே அதே ரிசல்ட் இதிலும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications