மொரட்டு அடி வாங்கிய ரஜினிகாந்த்தின் கூலி.. கிரிக்கெட் வீரர் அஸ்வின் கொடுத்த சர்ட்டிஃபிக்கேட் இதுதான்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, அமீர் கான், ஸ்ருதி ஹாசன், ரச்சிதா ராம் என பலர் நடித்த கூலி திரைப்படம் இந்த வருடம் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது. தோல்வி என்பது மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அப்படம் பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
மாநகரம் படத்தில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார். அவரது இயக்கத்தில் எப்படியாவது ஒரு சீனிலாவது நடித்துவிட வேண்டும் என்று பல நடிகர்கள் ஆசைப்பட்டதுண்டு. அவ்வளவு ஏன்? இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப்கூட அப்படி ஆசைப்பட்டுதான் விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான லியோ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்கும் வந்த ஆசை: அதேபோன்ற ஆசைதான் ரஜினிகாந்த்துக்கும் வந்தது. ஏற்கனவே தன்னுடைய நண்பர் கமல்ஹாசனை வைத்து லோகி இயக்கியிருந்த விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால்; நமக்கும் அப்படி ஒரு ஹிட் கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் கூலி கூட்டணியை அமைத்தார். இதில் அவருடன் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான், ஸ்ருதி ஹாசன், சார்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது.

பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸ்: ரஜினியை வைத்து லோகேஷ் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே நிச்சயம் இப்படம் 1000 கோடி ரூபாய் வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெறும் என பலரும் கூறினார்கள். ஏகப்பட்ட ஹைப்புகள் படத்தை சுற்றி எழுப்பப்பட்டன. கமலுக்கு கொடுத்த வெற்றியை விடவும் அதிகமாக ரஜினிக்கு கொடுப்பார் என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தங்களது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வைத்தார்கள்.
ஏமாற்றிய படம்: அவ்வளவு எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. கதையில் பெரிதாக ஒன்றும் இல்லை; படம் முழுக்க ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் என அடுக்கடுக்காக மைனஸை கூறினார்கள். ரசிகர்களை கவர தவறிவிட்டதால் படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வியை தாண்டி கடுமையான ட்ரோலை சந்தித்தது. முக்கியமாக லோகேஷ் கனகராஜின் மார்க்கெட்டையே இந்த தோல்வி அசைத்து பார்த்துவிட்டதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
அஸ்வின் பேட்டி: இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் கூலி படம் பற்றி பேசுகையில், "கூலி படம் மோசம் என்ற கருத்துதான் அதிகளவில் வந்தது. அந்தப் படம் ஓடிடியில் வந்த பிறகுதான் அதனை நான் பார்த்தேன். என்னை பொறுத்தவரை ஒரு படத்தை ஒரே சிட்டிங்கில் பார்க்க முடிகிறதா என்பதை கவனிப்பேன். என்னால் கூலி படத்தை அப்படி பார்க்க முடிந்தது. படம் முடிந்த பிற்கு எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. அதாவது இணையத்தில் வரும் விஷயங்களை விமர்சனங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள பழகிவிட்டேனா என்பதுதான் அது. படத்தில் பத்து குறைகளைகூட கண்டுபிடிக்கலாம். ஆனால் இவர்கள் சொன்ன அளவுக்கு மோசம் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











