CM விஜய் மகனுடன் மோதும் லோகேஷ் கனகராஜ்.. ஆரம்பமே அடிதடியாதான் இருக்கும் போலயே.. DC ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: தமிழ் சினிமாவில் வெற்றிப்பட இயக்குநராக தனக்கென தனி முத்திரையை பதித்துள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது முதல் முறையாக முழுநீள கதாநாயகனாக களமிறங்கியுள்ள திரைப்படம் 'DC'. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டுமின்றி, தனக்கென ஒரு தனித்துவமான திரைமொழியை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ், முதல் முறையாக ஹீரோவாக நடிக்கிறார் என்பதே இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஆக்ஷன், உணர்ச்சி மற்றும் அருண் மாதேஸ்வரனின் வழக்கமான ராவான மேக்கிங் பாணி ஆகியவை இணைந்திருப்பதால், இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே வெளியாகியுள்ள டீசர் மற்றும் டிரைலர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. லோகேஷ் கனகராஜின் தோற்றம், அதிரடியான ஆக்ஷன் காட்சிகள், அனிருத்தின் பின்னணி இசை மற்றும் அருண் மாதேஸ்வரனின் காட்சியமைப்பு ஆகியவை ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. இதனால், படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்து வந்தது.

இந்நிலையில், அந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 'DC' திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் #DC என்ற ஹேஷ்டேக் மீண்டும் டிரெண்டாகி வருகிறது.
முதலமைச்சர் மகன்: ஆனால், இந்த ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களிடையே மற்றொரு சுவாரஸ்யமான விவாதத்தையும் கிளப்பியுள்ளது. அதே ஜூலை 31ஆம் தேதியில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள 'சிக்மா' திரைப்படமும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், ஜேசன் சஞ்சயின் முதல் இயக்குநர் முயற்சியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
எதிர்பார்ப்பு: இதனால், ஒரே நாளில் இரண்டு முக்கிய அறிமுகங்கள் திரையுலகில் அரங்கேறவுள்ளன. ஒரு பக்கம் பல வெற்றிப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் நடிகராக தனது புதிய இன்னிங்ஸை தொடங்குகிறார். மறுபக்கம், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தனது முதல் படத்தை ரசிகர்கள் முன் கொண்டு வருகிறார். இருவரின் திரைப்பயணத்திலும் இது மிக முக்கியமான தொடக்கமாக இருப்பதால், இந்த பாக்ஸ் ஆபிஸ் மோதல் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சரியான போட்டி: இரண்டு படங்களுமே வெவ்வேறு கதைக்களத்தில் உருவாகியிருப்பதால், வசூல் போட்டியைத் தாண்டி ரசிகர்களின் வரவேற்பு யாருக்கு அதிகமாக கிடைக்கும் என்பதே தற்போது கோலிவுட்டில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் இந்த இரு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் மோதலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் முதலமைச்சர் மகனுடன் மோத சன் பிக்சர்ஸ் வேண்டும் என்றே இந்த படத்தை ஜூலை 31ஆம் தேதி ரிலீஸ் செய்கிறது என்ற பேச்சும் அடிபடாமல் இல்லை.


Click it and Unblock the Notifications