லோகேஷ் கனகராஜ் என்னங்க இப்ப செய்றாரு?.. அவருக்கெல்லாம் ஹெட் மாஸ்டர் கே.வி. ஆனந்த்தான் தெரியுமா?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்குநராகி எல்சியூ என்ற ஒன்றை ஃபார்ம் செய்து தனது முந்தைய படங்களின் கேரக்டர்களை அடுத்தடுத்த படங்களில் கொண்டுவருவதை ஃபேமஸ் ஆக்கியிருந்தார். அது விக்ரம் படத்தில் ஒர்க் அவுட்டாகியிருந்தது. ஆனால் லியோ படத்தில் சுத்தமாக எடுபடாமல் அந்த ஃபார்முலாவையே கிண்டல் செய்யும் அளவுக்கு சென்றது. ஆனால் அவருக்கெல்லாம் முன்னதாகவே இந்த நடைமுறையை தமிழ் சினிமாவில் கே.வி.ஆனந்த் தொடர்ச்சியாக செயல்படுத்தியிருந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவிடமாட்டோமா என்று பலரும் ஏங்கினார்கள். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துவந்த அவருக்கு லியோ, கூலி ஆகிய படங்கள் அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு அடியை கொடுத்துவிட்டன. இந்த அடியால் விழுந்த தழும்பை எப்படியாவது மறைக்க வேண்டும் என்று அவர் உழைக்கத்தான் செய்வார். ஆனால் அவர் இந்த நிலைமைக்கு வந்ததற்கு அவரேதான் காரணம் என்பது கசப்பான உண்மை.
எல்சியூ ஃபார்முலா: லோகி வந்து எல்சியூ என்ற ஒரு யுனிவர்ஸை கோலிவுட்டில் க்ரியேட் செய்தார். கைதி பட கதாபாத்திரங்களை விக்ரம் படத்தில் உலாவவிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த அவர்; அதே ஃபார்முலாவை லியோவிலும் தொடர்ந்தார். ஆனால் விக்ரம் படத்தில் இருந்த இயல்புத்தன்மை லியோவில் மிஸ் ஆனது. அது அவருக்கே பேக் ஃபயராகிவிட்டது.

பெரும்பாலானோர் லோகேஷ் கனகராஜ் வந்துதான் கோலிவுட்டில் யுனிவர்ஸை க்ரியேட் செய்தார் என்று தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அவருக்கும் முன்னதாக பாரதிராஜா, 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற சப்பாணி, மயில் கேரக்டர்களை கிழக்கே போகும் ரயில் படத்தில் கொண்டு வந்திருப்பார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்த ஃபார்முலாவை அடுத்தடுத்த படங்களில் அவர் தொடரவில்லை.
தொடர்ந்து செய்த கே.வி. ஆனந்த்: ஆனால் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி. ஆனந்த்தோ சினிமாட்டிக் யுனிவர்ஸை தனது முதல் படத்திலிருந்து கடைசி படம்வரை தொடர்ச்சியாக கொண்டு வந்துகொண்டே இருந்தார். அதுகுறித்து பார்க்கலாம். அதாவது அவர் 2005ஆம் ஆண்டு கனா கண்டேன் திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தில் இரவு நேரத்தில் ஸ்ரீகாந்த்தும், கோபிகாவும் சாலையில் செல்லும்போது குல்ஃபி ஐஸ் சாப்பிடுவார்கள்.
கனா கண்டேன் தாக்கம் அயனில்: அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அயன் திரைப்படத்தில் அதே இரவு நேரத்தில் குல்ஃபி ஐஸ் விற்பவர் வருவது போன்றும்; அதனை சூர்யா அருகில் இருக்கும் பொன்வண்ணனிடம் சொல்லும்படி காட்சி அமைத்திருப்பார். அதனைத் தொடர்ந்து இயக்கிய கோ திரைப்படத்தில், சினிமா பத்திரிகையாளர் வேடம் ஏற்றிருக்கும் பியா, அயன் படத்தை குறிப்பிடும்வகையில், 'ஹீரோ படம் முழுக்க தங்கம், வைரம் எல்லாம் கடத்துவானாம். கடைசியில் கஸ்டம்ஸ் ஆஃபிஸர் ஆகிவிடுவானாம். இதற்கு நான் 5 ஸ்டார் கொடுக்கணுமாம்' என வசனத்தை வைத்து கோ உலகத்தில் அயனை கொண்டு வந்திருப்பார்.
மூன்றாவதாக இயக்கிய மாற்றான் திரைப்படத்தின் ஒரு பாடலில், கோ படத்தின் க்ளைமேக்ஸில் இறந்துபோன வசந்தன் கதாபாத்திரத்தையும், இரண்டு சூர்யாக்களும் அமர்ந்து கோ படத்தை பார்ப்பது போன்றும், யூத் பாலிட்டிக்ஸ் பற்றிய படம் சூப்பராக இருக்கும் என்று அவர்கள் வசனம் பேசுவது போன்றும் வைத்து அதகளம் செய்திருந்தார்.
மேலும் அனேகன் படத்தில் அயன் படத்தில் இடம்பெற்ற பாடல்களை அந்த கதாபாத்திரங்கள் கேட்பது போன்றும், கவண் படத்தில் அனேகன் பட பாடலையும்,கடைசியாக இயக்கிய காப்பான் படத்தில் கவண் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி என அப்போதே சினிமாட்டிக் யுனிவர்ஸை க்ரியேட் செய்து முன்னோடியாக திகழ்ந்தார். முக்கியமாக தன்னுடைய முந்தயை படங்களை அவரே ட்ரோல் செய்யும்படியும் விஷயங்களை வைத்திருந்தார். அவர் செய்தது எல்லாம் எதார்த்தமாகவும், கதையோடு ஒன்றியும் இருந்தது. சொல்லப்போனால் லோகேஷ் கனகராஜுக்கெல்லாம் ஹெட் மாஸ்டர் கே. வி.ஆனந்த்தான். அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக அவரது சினிமாட்டிக் யுனிவர்ஸ் தொடர்ந்துகொண்டே இருந்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக கடந்த 2021ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார் என்பது வருத்தத்துக்குரிய ஒன்று.


Click it and Unblock the Notifications











