Lokesh Kanagaraj Salary- ரஜினி படத்துக்கு லோகேஷ் கனகராஜின் சம்பளம் இவ்வளவா?
சென்னை: Lokesh Kanagaraj Salary(லோகேஷ் கனகராஜ் சம்பளம்) ரஜினிகாந்த்துடன் இணையவிருக்கும் படத்துக்கு லோகேஷ் கனகராஜ் வாங்கவிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ்தான் இப்போது கோலிவுட்டின் டாப் இயக்குநர். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ச்சியாக நான்கு படங்களையும் ஹிட் படமாக கொடுத்திருக்கிறார். இதனால் அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் போட்டாபோட்டியில் இருக்கின்றனர். அவரது இயக்கத்தில் நடித்தால் கண்டிப்பாக ஒரு ப்ளாக் பஸ்டரோ இல்லை சூப்பர் டூப்பர் ஹிட்டோ தங்களது கேரியரில் சேர்ந்துகொள்ளும் என்ற கணக்குதான் அதற்கு காரணம்.

மெகா ப்ளாக் பஸ்டர் ஆன விக்ரம்: லோகேஷ் கனகராஜின் கிராஃபை இந்த அளவு உச்சத்துக்கு கொண்டு சென்றது கமல் ஹாசனுடன் அவர் இணைந்த விக்ரம் படம். அந்தப் படம் 500 கோடி ரூபாய் வசூலித்தது. அது கமலுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே உற்சாகம் கொடுத்தது. குறிப்பாக திரைக்கதையில் லோகேஷ் கனகராஜ் செய்திருந்த மாயாஜாலம் (எல்சியூ) படத்தை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியது.
விஜய்யுடன் இணைந்திருக்கும் லியோ: அவர் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் லியோவில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மாத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். காஷ்மீரில் படத்தின் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து தற்போது சென்னையில் விறுவிறுப்பாக லியோ ஷூட்டிங் நடந்துவருகிறது.

லோகேஷ் கனகராஜின் மாஸ் லைன் அப்: லியோ படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்கவிருக்கிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. ஏற்கனவே கைதி 2 படத்தை இயக்குவார் என்றும், ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்தே ஒரு படத்தை இயக்குவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட்டாக ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் இணைவார். அதை முடித்துவிட்டு கைதி 2வை தொடங்குவார் என்று இப்போது தகவல் பரவுகிறது.

ரஜினிகாந்த்துடன் இணையும் லோகேஷ் கனகராஜ்?: விக்ரம் படத்தின் மெகா வெற்றியை அடுத்து கமலும், லோகேஷ் கனகராஜும் ரஜினியை சந்தித்தனர். அப்போதே லோகேஷ் இயக்கத்தில் நடிப்பதற்கு ரஜினி விருப்பம் தெரிவித்ததாகவும், அதனையடுத்து ஒன் லைனையும் லோகேஷ் பிடித்துவிட்டார் எனவும் பேசப்பட்டது. ஆனால் விஜய் லியோ படத்தில் கமிட்டானார். சூழல் இப்படி இருக்க இப்போது ரஜினி - லோகேஷ் படத்துக்கான பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்திருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினியுடன் இணையும் படத்துக்கு லோகேஷ் சம்பளம் இவ்வளவா?: இந்நிலையில் ரஜினியுடன் இணையும் படத்துக்கு லோகேஷ் கனகராஜுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அந்தப் படத்துக்கு அவர் 40 கோடி ரூபாயிலிருந்து 45 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் அப்படத்தை ராஜ் கமல் நிறுவனமோ இல்லை சன் பிக்சர்ஸ் நிறுவனமோ தயாரிக்கலாம் எனவும் டாக் ஓடுகிறது. ஒருவேளை லோகேஷ் 40 கோடி ரூபாய்க்கும் அதிகம் சம்பளமாக பெறும்பட்சத்தில் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் பெருமையை அவர் பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











