Lokesh Kanagaraj - லியோ படத்தில் அதுக்காகத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டோம்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) லியோ படத்தி ஒரு சீனுக்காகத்தான் ரொம்பவே கஷ்டப்பட்டோம் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் என பலர் நடித்திருந்த அந்தப் படம் விஜய் ரசிகர்களை ரொம்பவே திருப்திப்படுத்தியிருக்கிறது. அதேசமயம் ரசிகர்களில் மற்றொரு தரப்பினரிடமிருந்து கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன.

வெற்றி விழா: கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியாக படம் சக்கைப்போடு போட்டிருக்கிறது. அதன்படி இதுவரை மொத்தம் 460 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. மேலும் லியோ படத்தின் வெற்றி விழா நவம்பர் ஒன்றாம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. இதில் விஜய் கலந்துகொண்டு ஏதேனும் குட்டி ஸ்டோரி சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
லோகேஷ் பேட்டி: இந்நிலையில் படத்தின் ரிலீஸுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பேட்டி கொடுத்துவருகிறார். அந்தவகையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "லியோ படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ரெஸ்பான்ஸ் பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. வெற்றி, தோல்வி என எதுவாக இருந்தாலும் நான் சகஜமாகவே இருப்பேன். அதுதான் என்னுடைய இயல்பான குணம்.
ரெஃபரன்ஸ் இல்லை: ஒரு படத்தில் இருந்து சில விஷயங்களை ரெஃபரன்ஸாக எடுத்துக்கொண்டு உருவாக்குவது பல படங்களில் நடக்கும். அந்த மாதிரியான கதை என்றால் அதுசார்ந்த படங்களை பார்த்து சில விஷயங்களை செய்ய வேண்டும். அப்போதுதான் சரியாக இருக்கும். லியோ படத்துக்கு ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸை ரெஃபரன்ஸாக நான் எடுக்கவில்லை. அந்தப் படத்தை பார்த்த பிறகுதான் லியோ என்ற கதையை நான் உருவாக்கினேன்.
விஜய்தான் எல்லாமே: லியோ படம் முழுக்க முழுக்க ஒரு பரிசோதனை முயற்சிதான். நான் இறந்துவிட்டேன் என்று முழுமையாக நம்பும் ஒருவன் கடைசிவரை மற்றவர்களிடம் அதை நிரூபிக்கிறான். அதுதான் கதையின் மையக்கரு. அதனால் படத்தின் மொத்த சுமையையும் தோளில் தாங்கியிருப்பது விஜய் மட்டும்தான். இந்தப் படம் முழுக்க முழுக்க அவர்தான் இருக்கிறார். இந்தப் படத்தின் மொத்தமும் விஜய்தான்.
பெரிய டாஸ்க்: லியோ படத்தை பொறுத்தவரை எனக்கு பெரிய டாஸ்க்காக இருந்தது கழுதைப் புலி சீன்தான். படத்தில் முதலில் வரும் விஜய் - கழுதைப் புலி சண்டை காட்சிக்காகத்தான் 1300 பேர் அவ்வளவு குளிரில் கஷ்டப்பட்டோம். விஜய் வெறும் சட்டை மட்டுமே அணிந்து குளிரில் நடித்தார். 13 நாட்கள் அந்தக் காட்சிக்காக மட்டும் செலவழித்தோம். அது நன்றாக வரவேண்டும் என்பதுதான் என்னுடைய கவலையாகவும் இருந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











