இதனால்தான் கருங்காலி மாலை போடுகிறேன்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன செம விஷயம்
சென்னை: கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சமீபகாலமாக நடிப்பிலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அவர்; இப்போது ஸ்ருதிஹாசன் இசையமைத்து கமல் ஹாசன் எழுதியிருக்கும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் ஹீரோவாக தோன்றி ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் தான் ஏன் கருங்காலி மாலை போட்டிருக்கிறேன் என்று அவர் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்திலேயே தன்னை ஒரு நல்ல இயக்குநர் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். அந்தப் படத்தை பார்த்த பலரும் கண்டிப்பாக இந்த இயக்குநர் பெரிய ஆளாக வருவார் என்று கணிக்க ஆரம்பித்தனர். அந்த கணிப்பை சரியாக்கும் விதமாக அமைந்தது அவரது இரண்டாவது படமான கைதி. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆகி ஒரே இரவில் லோகேஷின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றது.

முன்னணி ஹீரோக்களுடன்: இதனையடுத்து விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர் என்ற பெயரை பெற்றார் லோகேஷ். தொடர்ந்து தனது ரோல்மாடலான கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். விமர்சன ரீதியாக ஒரு தரப்பிடம் அந்தப் படம் அடி வாங்கினாலும் பெரும்பாலானோரிடத்தில் படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. 400 கோடி ரூபாய்வரை வசூலித்து இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநராக லோகேஷை மாற்றியது.
முதல் சறுக்கல்: இப்படி வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த லோகேஷுக்கு முதல் சறுக்கலாக லியோ திரைப்படம் வெளியானது. கடந்த வருடம் வெளியான அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. பிளாஷ்பேக் விவகாரம், மனிதர்களை பலி கொடுக்கும் காட்சி விவகாரம், திரைக்கதை என பல விஷயங்கள் லோகேஷுக்கு எதிராக திரும்பின. முக்கியமாக பிளாஷ்பேக் விஷயம் லோகேஷை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. வசூல் ரீதியாக படம் ஓகேதான் என்றாலும் விமர்சன ரீதியாக படுத்துவிட்டது.
எல்சியூ: முக்கியமாக லோகேஷ் கனகராஜின் பலங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது எல்சியூ. லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்ற கான்செப்ட் விக்ரம் படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ஆனால் லியோ திரைப்படத்தில் எடுபடவில்லை. மேலும் வேண்டுமென்றே இதில் எல்சியூவை லோகேஷ் திணித்திருக்கிறார் என்ற விமர்சனம்தான் மிஞ்சியது. இப்படி லியோவில் அவர் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தாலும் அவருக்கான டிமாண்ட் குறையவில்லை. அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து இயக்குகிறார்.
நடிகர் லோகேஷ்: லோகேஷ் கனகராஜ் இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்துகிறார். ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றிய அவர்; இப்போது ஸ்ருதிஹாசன் இசையமைத்து, கமல் தயாரித்து எழுதியிருக்கும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. முழு பாடலும் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த ஆல்பத்தில் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார் லோகேஷ்.
கருங்காலி மாலை: இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் ஏன் கருங்காலி மாலை போடுகிறேன் என்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் லோகேஷ். அவர் பேசுகையில், “லியோ படத்துக்கு பிறகுதான் இந்த கருங்காலி மாலை குறித்து நிறைய விளம்பரங்களில் பார்த்தேன். நான் இந்த மாலையை அணிந்திருக்க காரணம் என்னவென்றால், விக்ரம் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு காரில் வந்துகொண்டிருந்தோம். அப்போது சின்ன விபத்து ஏற்பட்டுவிட்டது.
நண்பர் கொடுத்தார்: உடனே எனது நண்பர் ஒருவர் இந்த மாலையை எனக்கு போட்டுவிட்டார். போட்டுவிட்டு, இது நெகட்டிவிட்டியை கம்மிப்படுத்தும் என்று கூறினார். அவரது அன்புக்காக மட்டுமே நான் இதை போட்டிருக்கிறேன். மற்றபடி கருங்காலி மாலையின் மீது நம்பிக்கையோ, அதன் வியாபாரம், விளம்பரத்திற்காகவோ நான் போடவில்லை” என்றார்.


Click it and Unblock the Notifications











