Fight club movie: சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய ஃபைட் கிளப் டீம்.. கியூட் செலபிரேஷன் போட்டோஸ்!
சென்னை: வித்தியாசமான கதைக்களத்துடன் கேங்ஸ்டர் படமாக வெளியானது ஃபைட் கிளப் படம். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் இந்தப் படம் வெளியான நிலையில் அறிமுக இயக்குநர் அப்பாஸ் ரஹ்மத் படத்தை இயக்கியிருந்தார். படத்தில் அவரது மேக்கிங் மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகள் சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், ரசிகர்களுக்கு சிறப்பான கேங்ஸ்டர் பட அனுபவத்தை கொடுத்து இந்தப் படம் வசூல் சாதனை படைத்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்களும் கிடைத்துள்ளன. படத்தில் செல்வா என்ற கேரக்டரில் நடித்துள்ள விஜயகுமார் பலமாக அமைந்துள்ளார்.
இந்தப் படத்தை தயாரித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவரது தயாரிப்பில் முதல் படமாக வெளியாகியுள்ளது ஃபைட் கிளப். தொடர்ந்து தன்னுடைய ஜூனியர்கள் உள்ளிட்டவர்கள் இயக்கத்தில் படங்களை தயாரிக்கவுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் லோகேஷ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் லியோ படம் வெளியான நிலையில், தயாரிப்பு,இயக்கம் என அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அடுத்த தயாரிப்பு குறித்தும் இவர் தற்போது முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே ரஜினியின் தலைவர் 171 படத்தின் முன் தயாரிப்பு பணியும் ஒருபுறம் சிறப்பாக சென்று வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: நடிகர் விஜய்யின் லியோ படத்தை வெற்றிப்படமாக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படத்தின்மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளார். மேலும் அவரது சம்பளமும் உயர்ந்துள்ளது. அடுத்ததாக ரஜினிகாந்த்துடன் இணைந்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். படத்தின் ஸ்கிரிப்ட் வொர்க் பணிகளை முடிக்க 3 மாதங்கள் ஆகும் என்றும் ஏப்ரல் மாதத்தில் தலைவர் 171 படத்தின் சூட்டிங் துவங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் லோகேஷ்.
ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம்: அவர் தற்போது ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார். தன்னுடைய அசிஸ்டெண்ட்கள் உள்ளிட்டவர்களுக்கு படம் இயக்கும் வாய்ப்பை இந்த நிறுவனம் மூலம் தரவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அவரது தயாரிப்பில் முதல் படமாக ஃபைட் கிளப் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. உறியடி படத்தின் நாயகன் விஜயகுமார் லீட் கேரக்டர்களில் நடிக்க கேங்ஸ்டர் படமாக வெளியானது ஃபைட் கிளப் படம். இந்தப் படத்தையொட்டி பிரமோஷன்களில் விஜய்குமார், லோகேஷ் கனகராஜ் கூட்டணி சிறப்பான வகையில் பங்கேற்றது.
ஃபைட் கிளப் கதைக்களம்: ரசிகர்களுக்கு வழக்கமாக பரிட்சமான பழிவாங்கும் கதைதான் என்றபோதிலும் படத்தின் மேக்கிங் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் ஆக்ரோஷமான இளைஞனாக விஜய்குமார் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். படத்தில் அதிகமான கேரக்டர்கள் இருந்தபோதிலும் அவர்கள் அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியுள்ளார் இயக்குநர். படத்தில் கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்துடன் சிறப்பாக ஒன்றுகிறது. பாடல்களும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. முதல் பாதியில் சிறப்பான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர், இரண்டாவது பாதியில் தடுமாறியதையும் பார்க்க முடிந்தது.
ஃபைட் கிளப் வெற்றிக் கொண்டாட்டம்: இந்தப் படத்தின் வசூல் சிறப்பாக அமைந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் விஜய்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்று உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளனர். தன்னுடைய முதல் தயாரிப்பிலேயே ரசிகர்களை கவர்ந்து படத்தை வெற்றிப்படமாக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து புதியவர்களுக்கும் தன்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











