Seshu: கடைசியா ரீ-யூனியன் ஷோ ஒன்றை நடத்தி எல்லாரையும் மீட் செய்ய வச்சாரு.. லொள்ளு சபா ஜீவா உருக்கம்!
சென்னை: விஜய் டிவியின் லொள்ளு சபா மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதன்மூலம் சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் நடிகர் சேஷு. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சேஷுவின் சிகிச்சைக்காக 10 லட்சம் ரூபாய் தேவைப்பட்ட நிலையில் அவரது நண்பர்கள், இந்த நிதியை திரட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி சேஷு காலமானார். அவருக்கு வயது 60. கொரோனா காலத்தில் அவரது பகுதி மக்களுக்கு அதிகமான உதவிகளை செய்து அதன்மூலம் மேலும் பலரது அபிமானத்திற்கு உள்ளாகியுள்ளார் சேஷு.
அந்தப் பகுதியில் சாலைகள் சிறப்பாக இருக்கவும் அவர் வழிவகை செய்ததாகவும் கொரோனா காலத்தில் பலரது சாப்பாட்டிற்காக அவர் செய்த உதவியை தங்களால் மறக்க முடியாது என்றும் அவரது பகுதி மக்கள் பலரும் உருக்கம் தெரிவித்துள்ளனர். முன்னதாக சேஷு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் உடல்நலன் தேறி மீண்டும் வரவேண்டும் என்று அவர்கள் தங்களது பிரார்த்தனைகளை வீடியோக்கள் மூலம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது மரணத்தையடுத்து அவரது ஆத்மா சாந்தியடையவும் அவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

காமெடி நடிகர் சேஷு: நடிகர் சேஷு விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சியில் அவரது காமெடி கேரக்டர்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டு சேர்த்தது. குறிப்பாக மூதாட்டி வேடத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். இந்த நிகழ்ச்சி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும சேஷுவிற்கு பெற்றத் தந்தது. நடிகர் சந்தானம், லொள்ளு சபா மனோகர், சுவாமிநாதன் உள்ளிட்டோருடன் இணைந்து இவர் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும் முக்கியமான கேரக்டரில் சேஷு நடித்திருந்தார்.
மாரடைப்பால் மறைவு: லட்சுமி நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட சேஷுவிற்கு திருமணமாகி மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவரது சிகிச்சைக்காக 10 லட்சம் ரூபாய் தேவைப்பட்ட நிலையில் அவரது நண்பர்கள் இந்தப் பணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில்தான் இன்று மாலை சிகிச்சை பலனின்றி சேஷு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது இழப்பு பெரிய தூண் சரிந்தது போன்ற இழப்பு என்று லொள்ளு சபா ஜீவா தெரிவித்துள்ளார்.
சேஷுவின் பொதுநலத் தொண்டு: சேஷு நல்ல நடிகர் மட்டுமல்ல என்றும் அதிகமான சமூக தொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்றும் ஜீவா தெரிவித்துள்ளார். அதிகமான நபர்களுக்கு அவர் அதிகமான உதவிகளை செய்துள்ளதாகவும் கஷ்டப்படுபவர்களுக்கு நிதி சேகரித்து அதை கொடுத்து உதவி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் குடும்பத்தினருக்கு இது மிகப்பெரிய இழப்பு என்றும் ஜீவா தெரிவித்துள்ளார். அவருடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழகியுள்ளதாகவும் அவருடன் இணைந்து நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், ஒரே குடும்பமாக பழகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சேஷு ஏற்பாடு செய்த ரீயூனியன் ஷோ: கடந்த இரு வாரங்களுக்கு முன்பு யூடியூப் சேனலுக்காக ரீ யூனியன் ஷோ ஒன்றை அவர் ஏற்பாடு செய்ததாகவும் விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் தெரிவித்த ஜீவா, கடைசியாக தான் பழகிய அனைவரையும் சந்திப்பதற்காகத்தான் அவர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாரோ என்று தற்போது நினைக்கத் தோன்றுகிறது என்றும் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார். தாங்கள் எந்த ஊருக்கு சென்றாலும் சேஷு குறித்து விசாரிப்பார்கள் என்றும் அந்த அளவிற்கு அவருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளதாகவும் பகிர்ந்த ஜீவா, இந்த நேரத்தில் அவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











