சாரி சேஷுண்ணா இப்படி உங்க வீட்டுக்கு வருவேன்னு நினைக்கல.. லொள்ளு சபா இயக்குநர் ராம்பாலா உருக்கம்!
சென்னை: லொள்ளு சபா இயக்குநர் ராம்பாலா பள்ளிக்கரணையில் உள்ள சேஷுவின் வீட்டுக்குச் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். வீடு கட்டியிருக்கேன் வந்து பாருங்க பாலான்னு பலமுறை கூப்பிட்டுருக்காரு, ஆனால், இப்படியொரு நிலைமையில வந்து பார்ப்பேன்னு சத்தியமா நினைக்கல என உருக்கத்துடன் பேசியுள்ளார் ராம்பாலா.
2004ம் ஆண்டு விஜய் டிவியில் ஆரம்பமானது தான் லொள்ளு சபா நிகழ்ச்சி. சுமார் 250 எபிசோடுகளை ராம்பாலா இ யக்கி உள்ளார். சந்தானம், ஜீவா, மனோகரன், சுவாமிநாதன், சேஷு, மாறன், யோகி பாபு உள்ளிட்ட 30 பேர் கொண்ட குழுவையே வழிநடத்தியவர் ராம்பாலா தான்.

லொள்ளு சபா நிகழ்ச்சி சர்ச்சை காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், சினிமா எடுக்க நினைத்த ராம்பாலாவுக்கு ஏகப்பட்ட சவால்கள் ஏற்பட்டன. கடைசியாக சந்தானத்தை வைத்து அவர் இயக்கிய தில்லுக்கு துட்டு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
மாரடைப்பால் பிரிந்த சேஷு உயிர்: லொள்ளு சபா சேஷு என்றே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த சேஷுவின் காமெடிகள் பலராலும் பேசப்பட்டு வந்தன. "அச்சச்சோ அவரா அவர் பயங்கரமான ஆளாச்சே" என அவர் பேசிய வசனம் வடிவேலுவின் காமெடிக்கு இணையான வசனமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் வெகுவாக கவர்ந்தது. 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட லொள்ளு சபா நிகழ்ச்சியை விஜய் டிவியே கண்டுக்கவில்லை என அதன் 20வது வருட ரீயூனியன் சந்திப்பின் போது பேசிய சேஷு இதே போல சந்தோஷமா நாம ஒரு குடும்பமா இருக்கணும் என பேசியுள்ளார். ஆனால், அன்றே அவருக்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று காலமானார்.
ராம்பாலா நேரில் அஞ்சலி: லொள்ளு சபா நிகழ்ச்சியை உருவாக்கி பல நகைச்சுவை நடிகர்கள் உருவாக காரணமாக இருந்த இயக்குநர் ராம்பாலா சேஷுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 என சந்தானத்தை வைத்து இவர் இயக்கிய 2 படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. மிர்ச்சி சிவாவை வைத்து கடைசியாக இயக்கிய இடியட் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், சேஷுவின் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்திய ராம்பாலா, சேஷுவின் காமெடி டைமிங்ஸ் யாருக்குமே வராது. எத்தனை டேக் வேண்டுமானாலும் எடுங்க பர்ஃபெக்ட்டா சீன் வரணும் என்பதில் குறியாக இருக்கக் கூடிய நடிகர். தன்னிடம் காசு இல்லைன்னாலும் எங்கேயாவது புரட்டிக் கொண்டு வந்து உதவி செய்வார் என்றார்.
வீட்டுக்கு இப்போதான் வரேன்: புதுசா வீடு கட்டியிருக்கேன் வாங்க பாலான்னு கூப்பிட்டார். சினிமா வேலை காரணமாக வரவே முடியாத சூழல் இருந்தது. அவர் மறைந்த பின்னர் தான் அவரது வீட்டுக்கு வரவேண்டியதாக மாறிவிட்டது. சாரி சேஷுண்ணா என உருக்கமாக ராம்பாலா பேசிய காட்சிகள் ரசிகர்களை கனக்க வைத்துள்ளது.
லொள்ளு சபா பிரபலங்கள் இரங்கல்: லொள்ளு சபாவில் சேஷுவுடன் இணைந்து நடித்த ஜீவா, மாறன், சந்தானம் உள்ளிட்ட பலர் சேஷுவின் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர். இன்று காலை 8 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது


Click it and Unblock the Notifications











