’லொள்ளு சபா’ சேசு காலமானார்.. மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிர் பிரிந்தது
சென்னை: லொள்ளு சபா மூலம் பிரபலமான காமெடி நடிகர் சேசு காலமானார். அவருக்கு வயது 60. மாரடைப்பு ஏற்பட்டு சமீபத்தில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேசு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரையுலகத்திற்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் சினிமாவில் அறிமுகமான சேசு விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் பிரபலமானார்.

நடிகர் சந்தானம் அந்த நிகழ்ச்சியில் இருந்து சேசுவுடன் பணியாற்றி வரும் நிலையில், தனது பல படங்களில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
சேசு மரணம்: தொடர்ந்து காமடி நடிகர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வரும் நிலையில், மாரடைப்பு என்கிற வார்த்தையை கேட்டாலே ரசிகர்களுக்கு பயம் தொற்றிக் கொள்ள நேரிடுகிறது. விவேக், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்கள் உயிரிழந்த நிலையில், காமெடி நடிகர் சேசுவுக்கு மாரடைப்பு என்றதும் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பதறிப் போனார்கள். சேசு குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்த நிலையில், எதுவும் பலனளிக்கவில்லை.
லொள்ளு சபா: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தனது பாடி லேங்குவேஜ், ஃபேஸ் எக்ஸ்பிரஷன்கள் மூலம் சிரிக்க வைத்து வந்த சேஷு சந்தானம் நடிப்பில் வெளியான பல படங்களிலும் அவருடன் காம்பினேஷன் காட்சிகளில் நடிக்க வைத்து சிரிக்க வைத்துள்ளார்.

வடக்குப்பட்டி ராமசாமி: சந்தானம் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் மெட்ராஸ் ஐ நோயை ஊருக்குள் கொண்டு வந்து அனைவரையும் ஆத்தா கண்ணை குத்திட்டா என சந்தானம் நம்ப வைத்திருப்பார். அந்த காட்சியில் நடித்து கலக்கியிருப்பார் சேசு. இவருக்கும் நிழல்கள் ரவிக்கும் இடையே நடக்கும் அந்த காட்சியெல்லாம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. கடைசியில் சலங்கை கட்டிக் கொண்டு இவர் ஆடும் காட்சிகளும் ரசிகர்களை சிரிக்க வைத்தன.
ரெட்டின் கிங்ஸ்லி இரங்கல்: சற்று முன் காமெடி நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேசு உயிரிழந்து விட்டார் என்கிற செய்தியை அறிவித்து இரங்கல் தெரிவித்துள்ளார். சேசுவுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என உதவி கேட்கப்பட்ட நிலையில், அவரது உயிர் பிரிந்து விட்டது பலரையும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











