சேஷு உயிரிழக்க காரணமே இதுதான்.. அவர்கிட்ட இருந்து இதை மட்டும் கத்துக்காதீங்க.. நடிகர் பழனி பகீர்!
சென்னை: லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சேஷு உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. நடிகர் சந்தானம், லொள்ளு சபா இயக்குநர் ராம்பாலா, லொள்ளு சபா ஜீவா, ரவி மரியா, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடிகர் சேசு உடன் இணைந்து நடித்த லொள்ளு சபா பழனி நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது சேஷு அண்ணனிடமிருந்து எப்படி தானம் செய்வது என்பதை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் தம் அடிக்கும் விஷயத்தை கற்றுக் கொள்ளக் கூடாது எனக் கூறியுள்ளார்.

குடிப்பழக்கத்தை நிறுத்தி: காமெடி நடிகர் சேஷு குடிப்பழக்கத்தை நிறுத்தி 15 வருடங்கள் ஆகின்றது எனக் கூறுகின்றனர். சந்தானத்துடன் இணைந்து அவர் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும் குடிகார பூசாரி ஆகவே நடித்திருப்பார். மெட்ராசுக்கு அவரை அழைத்துச் சென்று நிழல்கள் ரவி இடமிருந்து கண் நோயை தொற்றிக்கொள்ள செய்து, வடக்குப் பட்டிக்கு அழைத்து வந்து ஊர் மக்களை கண்ணாத்தா கண்ணை குத்தி விட்டாள் என மூடநம்பிக்கை பரப்பி மூடிய கோயிலை திறப்பது தான் அந்த படத்தின் கதை.
செயின் ஸ்மோக்கர்: குடிப்பழக்கத்தை நிறுத்தினாலும் புகைப்பிடிப்பதை சேசு அண்ணா விடவே இல்லை, அவர் ஒரு செயின் ஸ்மோக்கர். மது குடிக்கும் பலரும் நல்லாத்தான் வாழ்கின்றனர். ஆனால் புகை பிடித்தால் தான் நுரையீரல் பாதிப்படைந்து விரைவிலேயே இறக்கும் சூழல் உருவாகிறது. தன்னிடம் காசு இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட சேசு அண்ணாவிடம் இருந்து தானம் செய்வதை கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அவரிடமிருந்து புகைப்பிடிப்பது எப்படி என்பதை தயவுசெய்து யாரும் கற்றுக் கொள்ள வேண்டாம். புகை நிச்சயம் நமக்கு பகை என லொள்ளு சபா பழனி சேஷுவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான உண்மையான காரணத்தை கூறியுள்ளார்.
கிழவிமேல கைபோடுற அளவுக்கு: லொள்ளு சபாவில் என்னுடைய முதல் காட்சியே சேஷு அண்ணாவுடன் தான் இருந்தது. கெழவி கெட்டப்பில் சேஷு அண்ணா இருந்துக் கொண்டு சீட்டாட ஒரு கை போட சொல்வார். கிழவி மேல கைபோடுற அளவுக்கு நான் ஒண்ணு கேஞ்சி பிடிச்சு அலையல என வசனம் பேசி நடித்திருப்பேன். கலியுக கர்ணன் என்றே சேஷு அண்ணாவை சொல்லலாம். கொரோனா காலத்தில் ஏரியாவில் உள்ள பலருக்கு அரிசி வாங்கித் தருவது உள்ளிட்ட பல நிவாரண உதவிகளை செய்திருக்கிறார்.
இலவச திருமணம்: 3 பிள்ளைகள் சேஷு அண்ணாவுக்கு இருக்கு, வீடு கட்டினாலும் வீடு கடனில் தான் இருக்கிறது. ஆனாலும், ஏழை மக்கள் 10 பேருக்கு மேல் இலவச திருமணம் நடத்தி வைத்திருக்கிறார். தர்மம் தலைகாக்கும் என சொல்வது எல்லாம் சும்மா. அப்படியிருந்தால் தர்மம் செய்த விவேக் சார், மயில்சாமி அண்ணன் எல்லாம் இவ்ளோ சீக்கிரமா போயிருப்பாங்களா? அடுத்தவங்களுக்கு உதவி செய்யுறது எவ்ளோ முக்கியமோ அதே அளவுக்கு நம்முடைய உடல்நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்றும் பழனி பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











