லொள்ளு சபா முதல் வடக்குப்பட்டி ராமசாமி வரை.. சேஷுவை கடைசி வரை கைவிடாத சந்தானம்.. ஆனால்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சேஷு. லட்சுமி நாராயண சேசு என்கிற முழுப் பெயரை சேஷு என சுருக்கி செல்லமாக பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அழைத்து வந்தனர். வித்தியாசமான உடல்மொழியால் அனைவரையும் பார்த்த மாத்திரத்திலேயே சிரிக்க வைத்து விடும் கெட்டிக்காரர்.
வறுமையில் வாடினாலும் மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதை எப்போதுமே கடைபிடித்து வந்தார் சேஷு. பல ஆண்டுகளாக இதய பிரச்சனை காரணமாக போராடி வந்தவர் சேஷு என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், நிவாரண உதவிகளை செய்யும் போது ஹார்ட் பேஷன்ட் நான் என அவர் பேசிய வீடியோவும் தீயாக பரவி வருகிறது.
லொள்ளு சபா: துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவுக்கு தனுஷ் அறிமுகமான நிலையில், அதே படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சேஷு. ரிமோட், திருடிய இதயத்தை, வீராப்பு, நீதானா அவன், வேலாயுதம், ஜமாய், இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவருக்கு சந்தானம் தனது ஏ1 படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். லொள்ளு சபா காலத்தில் இருந்தே நட்பாக பழகி வந்தவர் சேஷு. காமெடியில் கலக்கினாலும், அவருக்கான பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காமலே இருந்த நிலையில், சந்தானம் தொடர்ந்து தனது படங்களில் நடிக்க வைத்தார்.
சந்தானத்துடன் இத்தனை படங்கள்: ஏ1 படத்தைத் தொடர்ந்து டிக்கிலோனா, பாரீஸ் ஜெயராஜ், குலுகுலு மற்றும் கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி வரை பல படங்களில் சந்தானம் தொடர்ந்து சேசுவுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளார். வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் சேஷு சமீபத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வடக்குப்பட்டி ராமசாமியில் வேறலெவல்: லொள்ளு சபாவிற்கு பிறகு ரசிகர்களை சேஷு சிரிக்க வைத்தார் என்றார் அது வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் தான். கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ், மாறன் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் கோவில் பூசாரியாக நடித்து சேஷு பண்ண சேட்டையெல்லாம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. கடைசி வரை மக்களை சிரிக்க வைத்து வந்த சேஷு கடைசியாக ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் கண் கலங்கி அழ வைத்து விட்டார்.
உதவி செய்தாரா சந்தானம்?: சேஷு மருத்துவமனையில் இருக்கிறார். அவரது சிகிச்சை உதவி செய்யுங்க என கோரிக்கை விடப்பட்டது. ஆனால், சந்தானம் சேஷுவின் சிகிச்சைக்கு உதவி செய்தாரா? இல்லையா? என்கிற எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. வடக்குப்பட்டி ராமசாமி இயக்குநர் கார்த்திக் யோகி சேஷுவுக்கு இரங்கல் பதிவு போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











