4 மாத சிசு.. என்னோட வயிற்றுலயே.. ஒரு நைட்டுக்கு 500 ரூபாய்.. கஷ்டங்களைச் சொன்ன கெனிஷா
சென்னை: நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது தோழி பாடகி கெனிஷா குறித்த சர்ச்சையான பதிவுகளும் பேச்சுக்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அடிக்கடி அடிபட்டு வருகிறது. ரவி மோகன் விவாகரத்துக்கு காரணமே கெனிஷா தான் என்று இணையவாசிகள் பலரும் பலவிதமாக பேசினர். இதற்கெல்லாம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி நிறுத்தி வைத்தாலும், இணையவாசிகள் அமைதியாக இருப்பதில்லை.
கெனிஷா குறித்து மிகவும் மோசமாகவும் கீழ் தரமாகவும் விமர்சித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கெனிஷா, என்னை விமர்சிப்பதற்கு முன்னர் என்னை யார் என்று தெரிந்து கொண்டு அதன் பின்னர் விமர்சியுங்கள் என்று அவர் வெளியிட்டுள்ள நீண்ட நெடிய வீடியோ குறித்த பேச்சு தான் இணையத்தில் பரவலாக இருக்கிறது.
அவர் அந்த வீடியோவில், " எனது பெயர் கெனிஷா, நான் எனது அம்மாவை கடந்த 2013ஆம் ஆண்டு இழந்தேன், அப்பாவும் 2017ஆம் ஆண்டு இறந்துவிட்டார். நான் நான்காவது படிக்கும்போதே, எனது உறவுக்காரர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன். சுமார் 18, 19 வயது இருக்கும்போது எனக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது எனக்கு விவரமே தெரியாது. திருமணத்திற்குப் பின்னர் எனது கணவர் என்னை மிகவும் மோசமாக தாக்கியதால், எனது வயிற்றில் இருந்த நான்கு மாத சிசு இறந்து விட்டது. எனது அடி வயிற்றில் இருந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது. என்னால் அந்த வலியில் இருந்து வெளியே வரவே முடியவில்லை. எனது அம்மா, அப்பா, குழந்தை என எல்லாரையும் இழந்துவிட்டேன். அதன் பின்னர் அந்த திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறிவிட்டேன்.

500 ரூபாய்: என்னை நான் உறுதியாக மாற்றிக் கொள்ளத் தொடங்கினேன். ஆமாம் நான் பார்களில் பாடியவள் தான், அதில் என்ன தவறு இருக்கிறது? நான் பாரில் பாட ஒரு இரவுக்கு ரூபாய் 500 கொடுப்பார்கள். எனக்கு அதுவே பெரிய விஷயம், அதை நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து உள்ளேன்.
அறிவே இல்லையா?: என்னைப் பற்றி பேசுபவர்கள் பலருக்கும் அறிவே இல்லையா என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது. எனக்கு நான்கு ஐந்து குழந்தைள் உள்ளது, நான் ஆண்டி, எனது அப்பாவை முதியோர் காப்பகத்தில் தங்க வைத்துவிட்டு ரவி மோகனுடன் சுற்றிக் கொண்டு இருக்கிறேன் என்று எல்லாம் என்னென்னமோ கூறிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கூட உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? நானும் ரவி மோகனும் இங்கு உங்கள் கண் முன்னால் தானே இருக்கிறோம், நாங்கள் எங்கும் வேறு நாட்டிற்கு ஓடிப் போகவில்லை தானே? அதன் பின்னர் ஏன் இப்படி பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்?

கவனம்: ரவி மோகன் என்னைச் சந்தித்த போது அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார், நான் அவருக்கு ஒரு தெரபிஸ்ட்டாக சில அறிவுரைகளை சொன்னேன் அவ்வளவுதான். எங்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டது. ரவி மோகன் குடும்பத்தை கெடுக்க வேண்டும் என்று ஒரு சிசுவை வயிற்றிலேயே இழந்த ஒருவர் நினைப்பாரா? தயவு செய்து உங்கள் வாழ்க்கையில் முன்னேற உங்களுக்கு வேண்டியவற்றில் கவனம் செலுத்துங்கள்" என்று பேசியுள்ளார். இவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications