Love Today - நூறு கோடி க்ளப்பில் இணைந்த லவ் டுடே.. இரண்டாவது படத்திலேயே சம்பவம் செய்த பிரதீப்
சென்னை: Love Today (லவ் டுடே) லவ் டுடே படம் நூறு கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருக்கிறார்.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். 90ஸ் கிட் கோமாவுக்கு சென்று தற்காலத்துக்கு திரும்பினால் என்ன நடக்கும் என்பதை அடிப்படையாக வைத்து படம் உருவானது. அந்தப் படத்துக்கு ரசிகர்கள் டீசண்ட்டான வரவேற்பை கொடுத்தார்கள்.

லவ் டுடே: இதனையடுத்து சில வருடங்கள் அமைதியாக இருந்த பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கிய குறும்படத்தை டெவலப் செய்து லவ் டுடே படத்தை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இவானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குநர் பிரதீப் ரங்கநாதனே இதில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்தப் படம் அவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்சேஷனல் லவ் டுடே: லவ் டுடே திரைப்படம் இளைஞர்களை குறிப்பாக 2K கிட்ஸை வெகுவாக கவர்ந்துவிட்டதாலும், காதலர்களுக்குள் நடக்கும் ஊடலையும், கூடலையும் தற்காலத்திற்கேற்ப காட்சிப்படுத்தியிருந்ததாலும் மெகா ஹிட்டானது. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று திரைப்படத்தை ரசித்தனர். மேலும் படம் திரையரங்குகளீல் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டு: இதற்கிடையே லவ் டுடே படத்தை பார்த்த ரஜினி பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டி சால்வை அணிவித்தார். அதுமட்டுமின்றி பிரதீப் ரங்கநாதனிடம் தனக்கு ஒரு கதை செய்ய ரஜினி சொன்னதாகவும் அப்போது தகவல் பரவியது. மேலும் படமானது ஹிந்தியில் ரீமேக்காகிறது. இந்தப் படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் ரொம்பவே பிரபலமாகிவிட்டார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில்: அடுத்ததாக அவர் எந்தப் படத்தை இயக்கவிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். விரைவில் அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. இந்த சூழலில் லவ் டுடே படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாத்தி படம் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
நூறு கோடி ரூபாய்: அதாவது பெரிய நடிகர்களின் எந்த படம் முதன்முறையாக நூறு கோடி ரூபாயை வசூலித்தது என்று ரசிகர் ஒருவர் ட்விட்டரில் ஒரு லிஸ்ட்டை பகிர்ந்திருந்தார். அதில் லவ் டுடே படம் இடம்பெறவில்லை. இதனை கவனித்த அர்ச்சனா கல்பாத்தி கமெண்ட் செக்ஷனில் லவ் டுடே படமும் நூறு கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் பிரதீப் ரங்கநாதனும் நூறு கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்துவிட்டாரே என்று பிரமிப்பில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











