‘லவ்வர்’ படத்தின் இசை வெளியீடு
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் 'லவ்வர்'. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசுகையில்," இந்த படத்தைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் பாப்லா நெரூடாவின் ஒரு கவிதையைத்தான் குறிப்பிடவேண்டும். 'காதல் சிறியவிசயம் தான். ஆனால் அதிலிருந்து விட்டுவிலகுவது தான் கடினமான விசயம்'. இது தான் இப்படத்தின் அடிநாதம். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், 'என்னை நீயும், உன்னை நானும் யார் முதலில் இழப்பது என்பது தான்...' இப்படத்தின் அடிநாதமாக இருக்கிறது. இந்த படத்தின் திரைக்கதையை படிக்கும் போது இயக்குநர் பிரபுராம் வியாஸின் எழுத்து, நாவலை வாசிக்கும் உணர்வைக் கடந்து எமோஷனலாக அதனுடன் இணைந்துவிட்டேன். இதில் கமர்சியல் எலிமெண்ட்டுகளை லாவகமாக இணைத்து எழுதியிருந்தார். அதனால் பிரபுராம் வியாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படத்தில் இடம்பெறும் பாடல்களில் பாடலாசிரியர் மோகன் ராஜன், ஜென் தத்துவங்களை எளிதான வரிகளாக எழுதி மனதில் இடம்பிடிக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்." என்றார்.

இயக்குநர் பிரபுராம் வியாஸ் பேசுகையில்," 2019 ஆம் ஆண்டில் நான் மணிகண்டனுக்கு போன் செய்து, உங்களுக்காக கதை ஒன்றை தயார் செய்திருக்கிறேன். சந்திக்கலாமா? எனக் கேட்டேன். அன்று மாலையே வணிக வளாகம் ஒன்றில் சந்தித்து பேசினோம். அந்த முதல் சந்திப்பிலேயே எனக்கு சௌகரியமான சூழலை உருவாக்கினார். அவரிடம் என்னுடைய திரைக்கதையை கொடுத்துவிட்டு வந்தேன். மறுநாளே அந்த கதையை வாசித்துவிட்டு, அதைப் பற்றி நிறைய நேரம் பேசினார். நானும் இந்த கதையை எழுதிய பிறகு முதலில் அவரைத் தான் தொடர்பு கொண்டேன். அவருக்கும் இந்த கதை புரிந்து.. அதிலுள்ள நுட்பமான விசயங்களைப் பற்றி பேசியபோது, என்னுடைய எழுத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவே அதனை எடுத்துக் கொண்டேன். அதனால் மணிகண்டனுக்கு என்னுடைய முதல் நன்றி.
நானும், மணிகண்டனும் இணைந்து இந்த கதையை ஏராளமான பட நிறுவனங்களிடம் எடுத்துச்சொல்லியிருக்கிறோம். அதன் பிறகு ஒரு நாள் 'குட் நைட்' படத்தின் படபிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் மணிகண்டன் போன் செய்து, 'உங்களுடைய கதையை குட்நைட் தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் உணர்வு பூர்வமாக கதையைக் கேட்டு உங்களை சந்திக்கவேண்டும்' என்றார். உடனே தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனைச் சந்தித்தேன். அதன் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கியது.
நான் எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்றியதில்லை.. இந்த படத்தில் அது தொடர்பான அனைத்து விசயங்களையும் கற்றுக்கொண்டேன். இதற்கு வழிநடத்திய யுவராஜுக்கு நன்றி. இந்த படத்திற்கு பேருதவி அளித்த தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் நடிகைகள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிகர் கண்ணா ரவி நடித்திருக்கிறார். அந்த கதாப்பாத்திரத்தில் அவர் நேர்த்தியாக நடித்திருக்கிறார். படம் வெளியான பிறகு அவர் ரசிகர்களின் மனதில் நிச்சயம் இடம்பிடிப்பார். இப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாப்பாத்திரங்களையும் ரசிகர்கள் திரையரங்கை விட்டு வீட்டிற்கு செல்லும் போது அவர்கள் தங்களுடைய மனதில் சுமந்து செல்வார்கள். " என்றார்.
நடிகர் மணிகண்டன் பேசுகையில்," சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன். இந்த படத்தில் நடித்ததற்காக சந்தோஷப்படுகிறேன். நாங்கள் நினைத்த மாதிரி இந்த படத்தை உருவாக்கியதற்கு நிம்மதியாக இருக்கிறேன். 2019 ஆம் ஆண்டில் இந்த கதையை பிரபு சொன்னபோது அவரிடம், 'நீங்கள் என்னை வைத்து இயக்காவிட்டாலும், வேறு யாரையாவது வைத்து இயக்குங்கள். ஏனெனில் இந்த கதை இந்த சமூகத்திற்கு அவசியம் சொல்லப்படவேண்டிய கதை.' என்றேன்.
இந்த படத்தை இயக்கியதற்காக இயக்குநர் பிரபுராம் வியாஸை பாராட்டுகிறேன். அதனையடுத்து தயாரிப்பாளர்களைப் பாராட்டுகிறேன். ஏனெனில் இந்த படத்தின் திரைக்கதையில் எந்த இடத்திலும் கமர்சியல் எலிமெண்ட் வேண்டும் என சொல்லாமல், கதையோட்டத்தின் இயல்பை ஏற்றுக்கொண்டு தயாரித்தனர்.
படபிடிப்புத்தளத்தில் நாயகி கௌரி ப்ரியாவின் மனோபலம் எங்கள் அனைவரையும் வியக்கவைத்தது. கண்ணா ரவி தற்போது தனி கதாநாயகனாக நடித்து வருகிறார். இருந்தாலும் இந்த படத்தில் இயக்குநர் சொன்னதற்காக நல்லதொரு கேரக்டரில் கொஞ்சம் கூட முகச்சுழிப்பு இல்லாமல் நடித்து முழு ஒத்துழைப்பை அளித்தார். இவர்கள் மட்டுமல்லாமல் படத்தில் நடித்த அனைவரும் தாங்கள் ஒரு வெற்றிப்படத்தில் நடிக்கிறோம் என்ற எண்ணத்திலேயே நடித்தனர்.
நான் எப்போதும் ஒரு விசயத்தை மட்டும் உறுதியாக சொல்லிக்கொண்டேயிருப்பேன். அதேப்போல் இப்போதும் சொல்கிறேன். 'இந்த படம் உங்களை ஒருபோதும் டிஸ்ஸப்பாயின்ட்மென்ட் பண்ணாது." என்றார்.


Click it and Unblock the Notifications











