Swasika: எக்ஸ்க்ளூசிவ்! இப்படித்தான் ஹரீஷ் கல்யாணுக்கு மாமியாரானேன்.. ஓபனாக பேசிய ஸ்வாசிகா!
கொச்சி: இந்த ஆண்டு தமிழில் வெளியான சின்ன பட்ஜெட் படங்கள்தான் மெகா ஹிட் படங்களாக மாறியுள்ளது. வசூலிலும் விமர்சனத்திலும் மாபெரும் ஹிட் படமாக மாறியது என்றால் அது வெகுசில படங்கள்தான். இப்படி இருக்கும்போது, ரசிகர்கள் தொடங்கி இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் வரை பலராலும் பாராட்டப்பட்ட படமாக அமைந்த படம் லப்பர் பந்து. இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக மாறியது. படத்தின் கதாபாத்திர வடிவமைப்பு, திரைக்கதை, பாடல்கள் என அனைத்துமே ரசிக்கும்படியாக இருந்ததால், ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடினர். மேலும் படத்தில் நடித்த அனைவரையும் கொண்டாடினர். இப்படியான நிலையில் படத்தில் கெத்தின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்வாசிகாவின் யசோதை கதாபாத்திரம் பலருக்கும் பிடித்துப் போனது. இந்நிலையில் ஸ்வாசிகா நமது ஃபிலிமி பீட்டுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசியது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.
உங்களைவிட வயதில் மூத்த ஹரீஷ் கல்யாணுக்கு எப்படி மாமியாராக நடித்தீர்கள்? அதற்கான தைரியம் எங்கிருந்து வந்தது?
இந்தப் படத்தின் கதை எனக்கு சொல்லப்பட்டபோது, எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அதேநேரத்தில் மாமியாராக, கதாநாயகிக்கு அம்மாவாக எப்படி நடிப்பது என கொஞ்சம் யோசித்தேன். அப்படி இருக்கும்போது, படத்தின் மொத்த கதையையும் நான் படித்தேன். அப்போதுதான் படம் குறித்து நன்கு புரிந்து கொண்டது மட்டும் இல்லாமல், எனது கதாபாத்திரம் எவ்வளவு முக்கியமானது என புரிந்து கொண்டேன். எனது மனதிற்குள் இதுதான் எனக்கு சரியான கதாபாத்திரம் எனத் தோன்றியது. மனதில் இருந்து வந்த தைரியம்தான் லப்பர் பந்து படத்தில் நடிக்கத் தூண்டியது.

நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வருவது மிகவும் சவாலான விஷயமா?
ஆமாம். திரைத்துறையில் இருப்பவர்கள் மத்தியில் ஒரு பார்வை உள்ளது. அதாவது நாடகங்களில் நடிப்பவர்களை மக்கள் தினமும் பார்த்து வருகின்றார்கள். அவர்களை திரைப்படத்தில் நடிக்கவைத்தால், படத்திற்கு பெரிதாக பலன் அளிக்காது என நினைக்கின்றார்கள். ஆனால் நாடகத்தில் நடிக்கும் பல நடிகர்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களால் மிகவும் அழுத்தமான குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கமுடியும். அவ்வளவு திறமையுடன் நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் உள்ளார்கள். ஆனால் வெகுசில திரைத்துறையினர் மட்டுமே நாடகத்தில் நடிப்பவர்களை திரைத்துறையில் நடிக்க வைக்கின்றனர். நான் சீரியல்களில் நடிப்பதாலே பல பெரிய பட வாய்ப்புகள் நழுவிப்போயுள்ளது.

ஸ்வாசிகாவைப் பொறுத்தவரை வலிமையான பெண் என்றால் அது யார்?
என்னைப் பொறுத்தவரையில் வேலைக்குச் சென்று சம்பாதிக்கின்ற அதே நேரத்தில் வேலைக்குச் சென்றுகொண்டே தனது குடும்பத்தையும் பேணிக் காக்கின்ற பெண்கள் அனைவருமே தைரியமான பெண்கள்தான். காரணம், அவர்கள் தினமும் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். அதன்மூலம் பல அனுபவங்களைப் பெற்று, தைரியமான பெண்ணாக உருவெடுக்கின்றார்கள்.

பிரச்னைகளுக்கு மத்தியில் மனம் தளராமல் இருப்பது எப்படி?
பிரச்னைகள் யாருக்குத்தான் இல்லை. நான் தமிழில் நடிகையாகவேண்டும் என தமிழ்நாட்டிற்குச் சென்று முயற்சித்தேன். ஆனால் நான் நினைத்தது நடக்கவில்லை. அதன் பின்னர் கேரளாவிற்கு திரும்பிவந்து, இங்கு முயற்சி செய்தேன். இங்கும் நான் ஆசைப்பட்டதை நிறைவேற்ற முடியவில்லை. இப்படி இருக்கும்போது, நான் சினிமாவை விட்டுவிட்டு சின்னத்திரைக்கு மாறினேன். எனக்கு நடிக்கவேண்டும், லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனை நிறைவேற்ற, எனக்கு கிடைத்த வாய்ப்புகளை தவறவிடாமல் பார்த்துக் கொண்டேன். அப்படி இருக்கும்போது சினிமாவில் நினைத்த இடத்திற்குச் செல்லமுடியவில்லை என நான் மனம் நொந்திருந்தால் இப்போது நடிகையாக உங்கள் முன் இருக்க முடியாது.

திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஹேமா கமிட்டி மற்றும் WCC கவனிக்கவில்லையா?
ஹேமா கமிட்டி மற்றும் WCC தற்போது சில பிரச்னைகளைப் பேசியுள்ளது. அதேநேரத்தில் சினிமா உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசவேண்டிய பல விஷயங்கள் உள்ளது. குறிப்பாக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுக்கான சம்பளம் உள்ளிட்ட பல பிரச்னைகளை நாம் அடையாளம் காணவேண்டி உள்ளது.
ஸ்வாசிகா தற்போது உருவாகி வரும் சூர்யாவின் 45வது படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











