Lubber Pandhu: சிம்புவைச் சந்தித்த லப்பர் பந்து டீம்.. எல்லாம் அதுக்குத்தானாம்.. ஒரே பேச்சு!
சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கதாநாயகர்களாக நடித்து கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான படம் லப்பர் பந்து. முழுக்க முழுக்க ஊர் பகுதியில் நடைபெறும் கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் பார்த்த அனைவரும் படத்தை பாராட்டினர். குறிப்பாக படத்தில் இடம் பெற்றுள்ள விஜயகாந்த் பாடலான பொட்டு வெச்ச தங்க குடம் பாடல் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. படம் வரும் 31ஆம் தேதி அதாவது தீபாவளி அன்று ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படக்குழு நடிகர் சிம்புவைச் சந்தித்துள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள லப்பர் பந்து படம் கிரிக்கெட்டினை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தாலும் படம் முழுவதும் இருவருக்கு இடையிலான ஈகோவையும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் நடித்த நடிகைகளின் கதாபாத்திரங்கள் மிகவும் வலிமையான கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே படம் பார்த்த பலரும் படக்குழுவினரைப் பாராட்டினர். அனைத்து தரப்பு ரசிகர்களை திருப்திப்படுத்திய படமாக இந்தப் படம் இருந்தது என பல விமர்சகர்கள் கூறினார்கள். படத்தில் பேசப்பட்ட சாதி மறுப்பு மற்றும் சாதி ஒழிப்பு அரசியலுக்காக பலர் படத்தைப் பாராட்டினர். படத்தின் க்ளைமேக்ஸில் அன்பு மற்றும் கெத்து இருவரும் ஒருசேர நடந்து செல்லும்போது, அன்புதான் கெத்து என திரைவழியே சொல்லாமல் சொன்னார் இயக்குநர். இதனை பலரும் பாராட்டினர்.
இசை: படத்தின் இசையும், பாடல்களும் ரசனை மட்டும் இல்லாமல் படத்தின் தரத்தினை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த காரணமாகவும் இருந்தது. படம் இதுவரை பாக்ஸ் ஆஃபீஸில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 45 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வேட்டையன் போன்ற மிகப்பெரிய படம் ரிலீஸ் ஆன பின்னரும்கூட, மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட பின்னரும் கூட லப்பர் பந்து படத்திற்கான வரவேற்பு குறையவில்லை.

வசூல்: வார இறுதி நாட்களில் பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இப்போதும் ஓடுகின்றது. பொதுவாக ஒரு படம் ரிலீஸ் ஆகி 4 வாரங்களுக்குப் பின்னர் ஓடிடி தளத்தில் வெளியாகிவிடும். ஆனால் லப்பர் பந்து படத்தை வாங்கியுள்ள ஹார் ஸ்டார் நிறுவனம் படத்தினை வரும் 31ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இதனால் படத்தின் வசூல் தியேட்டரில் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே வாழை படத்திற்கும் இதுபோல தாமதமாகவே ஹாட் ஸ்டார் நிறுவனம் ஸ்ட்ரீம் செய்தது.

சிம்பு: இந்நிலையில் படம் பிரமாண்டமான வெற்றி பெற்ற நிலையில், படக்குழு நடிகர் சிம்புவைச் சந்தித்துள்ளது. நடிகர் ஹரீஷ் கல்யாண் தீவிரமான சிம்பு ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். இந்நிலையில் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிம்புவைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பாக நடிகர் ஹரீஷ் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க சிம்பு விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











