லைகா தயாரிப்பில் விஜய் மகன் மட்டுமில்லைங்க நீங்களும் படம் இயக்கலாம்.. Frame to Fame குறும்பட போட்டி!
சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தில் புதிய படத்தை இயக்கப் போறாருப்பா நமக்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்குமா என புலம்பிக் கொண்டிருக்கும் இளம் இயக்குநர்களுக்கு திறமைக்கான வாய்ப்பை லைகா நிறுவனம் திறந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படங்களை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பொன்னியின் செல்வன் படங்கள் லைகாவுக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்றுத் தந்தது.

அடுத்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் வெளியானால், பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்தும். அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் உருவாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ்க்கு ஜெயிலர் கொடுத்த வெற்றியை விட டபுள் மடங்கு லாபத்தை வேட்டையன் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.
மேலும், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன் நடித்து வரும் விடாமுயற்சி படத்தையும் லைகா நிறுவனம் வெளிநாட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறது.
இந்நிலையில், அடுத்ததாக, Frame to Fame எனும் குறும்பட போட்டியை இளம் இயக்குநர்களுக்காக நடத்தப் போவதாக லைகா நிறுவனம் தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், வெற்றி பெறும் டாப் 5 இயக்குநர்கள் லைகா தயாரிப்பில் படத்தை இயக்கும் வாய்ப்புகளை பெறவுள்ளனர்.
மேலும், இந்த குறும்பட போட்டியில் தேர்வு செய்யப்படும் 50 குறும்படங்கள் லைகாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்படும். 18 வயது நிரம்பியவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். 10 நிமிடத்துக்கு மேல் 20 நிமிடத்துக்குள் வேறு எந்த தளத்துக்கும் அனுப்பாத புதிய குறும்படங்களை லைகாவுக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் அனுப்பக் கூடிய குறும்படத்தின் அளவு 2 ஜிபிக்குள் இருக்க வேண்டும் என பல வழிகாட்டுதல்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய தலைப்புகள், ஆபாசம் நிறைந்த படங்களை அனுப்பினால் அதை ஏற்க மாட்டோம் என தெளிவாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. மார்ச் 7ம் தேதி முதல் மார்ச் 27ம் தேதிக்குள் உங்கள் குறும்படங்களை அனுப்பி வையுங்கள். வெற்றி பெறும் இளம் 5 இயக்குநர்கள் லைகா தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பை பெறப் போகின்றனர்.


Click it and Unblock the Notifications











