லால் சலாம் படத்தில் ரஜினியுடன் நடிக்க ஆசையா? லைகா தரும் அல்டிமேட் ஆஃபர்: எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை: ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அதனைத் தொடர்ந்து லால் சலாம் படத்தில் நடிக்க உள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ரஜினி கேமியோ ரோலில் நடிக்க உள்ளார்.
லால் சலாம் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ரஜினியுடன் நடிக்க லைகா நிறுவனம் சூப்பரான ஆஃபர் கொடுத்துள்ளது.

கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார்
ஜெயிலர் படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்து லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதில், ஒரு படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குவது உறுதியாகியுள்ளது. 'லால் சலாம்' என்ற டைட்டிலில் கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து ஸ்போர்ட்ஸ் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் ஹீரோவாக நடிக்கின்றனர். ஆனால், ரஜினிகாந்த் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடிக்கிறார் என படக்குழு அறிவித்துள்ளது.

லைகாவின் வாய்ப்பு
லால் சலாம் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் தவிர ஏராளமான புதுமுகங்களை நடிக்க வைக்க லைகா முடிவு செய்துள்ளதாம். அதனால் அதற்கென ஒரு ஆடிஷனை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, நாளை (டிச 25) திருவண்ணாமலையில் லால் சலாம் படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் உட்பட அனைத்து வயதினரும் இந்த ஆடிஷனில் கலந்துகொள்ளலாம் என லைகா அறிவித்துள்ளது.

ரஜினியுடன் நடிக்க ஆசையா?
திருவண்ணாமலையில் உள்ள சே ஸ்டூடியோவில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, லால் சலாம் படத்தில் நடிகர்களுக்கான ஆடிஷன் நடைபெறுகிறது. இதில் தேர்வாகும் நபர்கள், லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த பலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ரெடியாகி வருகின்றனர். ரஜினி, ஏஆர் ரஹ்மான், ஐஸ்வர்யா, லைகா என பிரம்மாண்டமாக உருவாகும் லால் சலாம் படத்தில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

லால் சலாம் சூட்டிங் அப்டேட்
லால் சலாம் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் 5ம் தேதி போஸ்டருடன் வெளியானது. மேலும், லால் சலாம் படத்தின் பூஜையும் நடைபெற்றது. இந்நிலையில், லால் சலாம் ஷூட்டிங்கை விரைவில் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட உள்ளதாம். அதன் பின்னரே ரஜினியின் காட்சிகளை படமாக்க ஐஸ்வர்யா முடிவு செய்துள்ளாராம். நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அதன் பின்னர் உடனடியாக லால் சலாம் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











